Breaking News
ஜான்வி: தாய் நினைவும்.. தாய்மை உணர்வும்..

தாய்ப் பறவை தனது குஞ்சுகளை சிறகுக்கு அடியில்வைத்திருப்பது போன்று மறைந்த நடிகை ஸ்ரீதேவி தனது மகள்கள் ஜான்வியையும், குஷியையும் பாதுகாத்தார். மகள்களின் ஒவ்வொருகட்ட வளர்ச்சியிலும் ஸ்ரீதேவியின் பங்களிப்பு இருந்தது. பொது நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கு பெறும்போதெல்லாம் தாயாகிய அவரும் உடனிருந்தார். மகள்கள் டீன்ஏஜ் பருவத்தை அடைந்ததும், ஸ்ரீதேவி அவர்களுக்கு தோழியாக மாறினார். அவர்கள் பிரபலமாகி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியபோது, வழிகாட்டியாக திகழ்ந்த அவர் திடீரென்று ஒருநாள் மறைந்துபோனார். அந்த பேரிடியை தாங்கிக்கொள்ள முடியாமல் மகள்கள் இருவரும் தவித்தார்கள். இதோ இப்போது ஜான்வி அந்த வலிகளில் இருந்து மீண்டு, வளர்ச்சியை நோக்கி அடியெடுத்துவைத்துக் கொண்டிருக்கிறார். அவர் நடித்த முதல் படமான இந்தி ‘தடக்’கும் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

தனது முதல் சினிமா மற்றும் தாயாரை பற்றிய நினை வலைகள்:

நான் நடித்த முதல் படமான தடக் இவ்வளவு பெரிய வெற்றியை அடையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. முதல் வாரத்திலே 50 கோடி ரூபாய் வசூலாகிவிட்டது. இந்த படம் பெரும் விவாதத்தை உருவாக்கிய மராத்திய மொழிப் படமான ‘சைராத்தின்’ ரீமேக். நான் பார்தவி சிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். ராஜகுடும்ப பின்னணி கொண்ட நாணமுள்ள பெண்ணான நான், கல்லூரிப் பருவத்தில் காதல்வசப்படுகிறேன். காதலுக்காக சொத்து, அந்தஸ்து எல்லாவற்றையும் இழக்க தயாராவேன். கதையை கேட்டபோதே எனக்கு பார்தவி சிங் பிடித்தமான வளாகிவிட்டாள். அவளுக்குள் எங்கேயோ நானும் இருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.

திரை உலகம் எனக்கு புதிதில்லை. சிறுவயதில் இருந்தே நான் ஷூட்டிங் ஸ்பாட்களுக்கு பெற்றோருடன் சென்றிருக்கிறேன். ‘போஸ்ட் புரடெக்‌ஷன்’ உள்பட சினிமா உருவாக்கத்தின் அனைத்து கட்டங்களும் எனக்கு தெரியும். அப்போதிருந்து நடிப்பில்தான் ஆர்வம் கொண்டிருந்தேன். அம்மாவை பார்த்தே வளர்்ந்ததால் அந்த ஆசை ஏற்பட்டிருக்கலாம். லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற நடிகைகளால்தான் முடியும். சிறுவயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்ற ஆசையோடுதான் நான் வளர்ந்தேன்.

தடக்கின் இறுதிக் காட்சியில் நான் ஒரு கைக்குழந்தையின் தாயாக ேதான்று வேன். அது ஒரு ருசிகரமான அனுபவம். அந்த காட்சியில் நடிப்பதற்கு முன்னால் நான் பிஞ்சுக் குழந்தைகளோடு அவ்வளவு நெருக்கம் எதுவும் காட்டியதில்லை. அந்த காட்சி என் மனதை மாற்றிவிட்டது. குழந்தைகள் மீதும், தாய்மார்கள் மீதும் எனக்கு பற்றுதல் உருவானது. படம் முடிந்து, திரைக்கு வந்த பின்பும் அந்த தாய்மை உணர்வு மட்டும் என்னிடம் இருந்துகொண்டே இருக்கிறது. அம்மா மீதும் எனக்கு அதிக பாசம் தோன்றுகிறது. அதுபோல் தங்கை குஷியோடும் பாசம் அதிகரித்திருக்கிறது.

நான் நடித்த முதல் படத்தை அம்மா பார்க்கவில்லையே என்ற கவலை எனக்கு உண்டு. ஆனால் அதன் 20 நிமிட ‘ரஷ்’ஷை அம்மா பார்த்திருந்தார். பார்த்துவிட்டு சாதாரண அம்மாக்களை போன்று என்னை கொஞ்சினார். அம்மா இப்போது இல்லை. அவர் உயிரோடு இருந்திருந்தால் என் நடிப்பில் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி வழிகாட்டியிருப்பார். உலகிலே விலை மதிக்கமுடியாததாக என் அம்மாவின் ஆலோசனைகள் இருந்திருக்கும். அந்த அதிர்்ஷ்டம் எனக்கு இல்லாமல் போய்விட்டது.

நல்ல பெண்ணாக இருப்பவரால்தான் நல்ல நடிகையாக முடியும் என்று என் அம்மா அடிக்கடி சொல்வார். வாழ்க்கை முறையிலும், மற்றவர்களோடு பழகும் முறையிலும் தெளிவாக இருக்கும்படி கூறினார். அவர் நடிகையாக இருப்பதால் எனது வளர்ச்சி எளிதாகிவிடும் என்று நினைக்காதே என்றும் சொன்னார். ஸ்ரீதேவியின் மகள் என்பது நல்லது செய்வதைவிட கெடுதல் அதிகம் செய்யும் என்றும் அம்மா எனக்கு முன்னறிவிப்பு கொடுத்தார். எனது நடிப்பை அம்மாவின் நடிப்போடு ஒப்பீடு செய்கிறார்கள். அதனால் எனக்கு மிகுந்த மனநெருக்கடி ஏற்படுகிறது. இதை எல்லாம் அம்மா எனக்கு முதலிலே விளக்கி புரியவைத்திருந்தார். அம்மா 300-க்கும் அதிகமான படங்களில், பல மொழிகளில் நடித்தவர். நான் ஒரு அறிமுக நடிகை.

நடிகை ஆகவேண்டும் என்பது என் ஆசையாக இருந்தாலும் முதலில், நான் டாக்டராகவேண்டும் என்றுதான் அம்மா ஆசைப்பட்டார். பிளஸ்-டூ முடித்ததும் வரலாறு மற்றும் பேஷன் பற்றி படிக்க தீர்மானித்தேன். நான் என்ன படித்தாலும் இறுதியில் சினிமாவில்தான் வந்து நிற்பேன் என்று என் பெற்றோரிடம் சொன்னபோது அவர்கள் அதை அப்போது தமாஷாகத்தான் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் நான் அதில் விடாப்பிடியாக இருந்தேன். படிக்கும் காலத்திலே நடிப்பதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டேன். நடிப்பு பயிற்சி, வசனம் பேசுவதற்கான பயிற்சி போன்றவைகளை பெற்றேன். நான் நடிப்பில் உறுதியாக இருப்பது தெரிந்த பின்பு அம்மா, என்னை நடிப்பு பயிற்சி பெறுவதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பிவைத்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.