Breaking News
தமிழகத்தில் நாளை பெட்ரோல் பங்க் செயல்படும்

பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் லிட்டருக்கு ஒற்றை இலக்க பைசா அளவில் 2 பைசா, 5 பைசா என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்தது. அதே அளவு அவ்வப்போது குறைக்கப்பட்டும் வந்தது.

ஆனால் சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு இரட்டை இலக்க பைசாக்களில் 25 பைசா, 40 பைசா என்ற அளவில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இவற்றின் விலையை ஓரளவு குறைப்பதற்கு வசதியாக, மத்திய அரசு உற்பத்தி வரியை குறைக்க முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டது. மாநில அரசுகளும் மதிப்பு கூட்டு வரியை குறைக்க முன்வரவில்லை.

இப்படி பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வருகிற நிலையில், இது தொடர்பாகவோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியோ பிரதமர் நரேந்திர மோடியும் சரி, பிற மத்திய மந்திரிகளும் சரி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது எதிர்க்கட்சிகளின் சாடலுக்கு வழி வகுத்து உள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது. இதில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரள்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை பெட்ரோல் பங்க் செயல்படும் என பெட்ரோல் பங்க்குகள் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் முரளி தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது கண்டனத்திற்குரியது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாளை பொதுவேலை நிறுத்தம் நடைபெற இருக்கிறது. பாரத் பந்த் நடந்தாலும் தமிழகத்தில் நாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்க்குகள் செயல்படும். மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவே பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்படுகின்றன” என அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.