Breaking News
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை முழு அடைப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை (திங்கட்கிழமை) முழு அடைப்புக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்து உள்ளது. இதில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரள்கின்றன.

பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் லிட்டருக்கு ஒற்றை இலக்க பைசா அளவில் 2 பைசா, 5 பைசா என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்தது. அதே அளவு அவ்வப்போது குறைக்கப்பட்டும் வந்தது.
ஆனால் சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு இரட்டை இலக்க பைசாக்களில் 25 பைசா, 40 பைசா என்ற அளவில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இவற்றின் விலையை ஓரளவு குறைப்பதற்கு வசதியாக, மத்திய அரசு உற்பத்தி வரியை குறைக்க முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டது. மாநில அரசுகளும் மதிப்பு கூட்டு வரியை குறைக்க முன்வரவில்லை.

இப்படி பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வருகிற நிலையில், இது தொடர்பாகவோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியோ பிரதமர் நரேந்திர மோடியும் சரி, பிற மத்திய மந்திரிகளும் சரி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது எதிர்க்கட்சிகளின் சாடலுக்கு வழி வகுத்து உள்ளது.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை (10–ந்தேதி) நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.

இந்த அழைப்பு காங்கிரஸ் கட்சி விடுத்து உள்ள அழைப்பு அல்ல, நாட்டு மக்கள் விடுத்து உள்ள அழைப்பு என்று அந்தக்கட்சி கூறி உள்ளது.

இந்த முழு அடைப்பு போராட்டம், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் இணைப்பதற்கான வாய்ப்பாகவும் காங்கிரஸ் கட்சிக்கு அமைந்து உள்ளது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணி கட்சியான தி.மு.க., முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. இந்த முழு அடைப்பை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

மற்றொரு கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. அனைத்து தரப்பினரும் முழு அடைப்புக்கு ஆதரவு தந்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என அந்தக் கட்சி அழைப்பு விடுத்து உள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரசுடன் கரம் கோர்த்து உள்ள மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும் முழு அடைப்புக்கு தனது ஆதரவை அறிவித்து உள்ளது. மாநில தலைநகரிலும், மாவட்ட தலைநகரங்களிலும் இந்த கட்சி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருக்கிறது.
லோக்தந்திரிக் ஜனதாதள கட்சி தலைவர் சரத் யாதவும், வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடக்கிற இந்த முழு அடைப்புக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.

இடதுசாரிக்கட்சிகள், நாளை தங்கள் பங்குக்கு போராட்டங்கள் நடத்துகின்றன.

மேற்கு வங்காள மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முழு அடைப்பு நடத்த மறுத்து விட்டது. அதே நேரத்தில் அந்த கட்சி வீதிக்கு வந்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.