பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் இன்று முழுஅடைப்புப் போராட்டம் நடக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித் துள்ளன. அதே நேரத்தில் பேருந்துகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கும் என தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றால் பெட்ரோல், டீசல் விலை வரலாறுகாணாத அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர் கிறது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் அதன் விலையை குறைக்க வலியுறுத்தியும் இன்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு (பாரத் பந்த்) காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. பாஜகவுக்கு எதிரான கட்சிகள் இந்த முழுஅடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், நாடு முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக கட்சிகள்
தமிழகத்தில் திமுக, திராவிடர் கழகம், மதிமுக, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமாகா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அதிமுக, பாஜகவுக்கு எதிரான கட்சிகள் முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக ஓரணியில் திரண்டுள்ளன.
முழு அடைப்பு போராட்டத் துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆகியோரும் ஆதரவு தெரிவித் துள்ளனர். இதனால், கடைகள் இன்று அடைக்கப்படும்.
தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற் சங்களும் முழு அடைப்புப் போராட் டத்தில் பங்கேற்கப்போவதாக அறிவித்துள்ளன. மேலும் தமிழ கம் முழுவதும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்காது என ஆட்டோ தொழிலாளர் சங்கங்களும் அறிவித்துள்ளன.
அதேநேரம் அரசுப் பேருந்துகள் இன்று வழக்கம்போல இயக்கப்படும் என தமிழ அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஊழியர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் நலன்கருதி அரசுப் பேருந்து கள் முழுமையாக இயக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக அரசு போக்கு வரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
அதேபோல பள்ளிகள், கல்லூரிகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கும் எனவும் அரசு அறிவித் துள்ளது. மேலும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் இன்று தொடங்குகின் றன.
லாரிகள் நிறுத்தம்
முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் ஓடாது என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தன்ராஜ் தெரிவித்துள் ளார். சென்னை கோயம்பேடு சந்தை வழக்கம்போல இயங்கும் என கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்கத் தின் தலைவர் எம்.தியாகராஜன் தெரிவித்துள்ளார். அதுபோல தமிழகம் முழுவதும் பெட்ரோல் நிரப்பும் நிலையங்களும் செயல் படும் என பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச்செயாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறும்போது, ‘‘டீசல் விலை உயர்வால் தனியார் பள்ளிகளுக்கும் பாதிப்புதான். எனினும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடக்க உள்ளதால் எங்களால் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை. எனவே பள்ளி பேருந்துகள், வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்படும்’’ என்றார்.
காவல் துறை எச்சரிக்கை
முழுஅடைப்பு போராட்டத்தை முன்னிட்டு அரசுப் பேருந்துகள், பணிமனைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது. கடைகளை மூடுமாறு கட்டாயப்படுத்துவோர், பேருந்துகள் உள்ளிட்ட பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்து வோர், வன்முறையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்ணா சாலையில் மறியல்
முழுஅடைப்பை முன்னிட்டு சென்னை அண்ணா சாலை தர்கா அருகில் இன்று காலை 10 மணிக்கு நடக்கும் மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
காங்கிரஸ் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இன்று காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை நடக்கும் போராட்டத்தில் திமுக, மதிமுக, இடதுசாரி கட்சிகள், தமாகா, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.