Breaking News
சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை தம்பதியிடம் ரூ.30 லட்சம் வைர நகைகள் திருட்டு

சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த தம்பதியிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் திருட்டு போனது. நகைகளை திருடிய மர்ம நபர்களை ரெயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை திருவள்ளூர் சாந்திநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பிரபுகுமார் (வயது 65). இவர் தனது மனைவி கோமளாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து, நேற்று முன்தினம் மாலை ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் புறப்பட்டார்.

சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டியில் தம்பதியினர் பயணம் செய்தனர். முன்னதாக தாங்கள் வைத்திருந்த விலை மதிப்புமிக்க வைர நகைகளை கைப்பையில் வைத்து, தனது தலையணையில் வைத்து பிரபுகுமார் படுத்துக்கொண்டார். ரெயில் திருட்டு பயம் காரணமாக நகைகளை அவர் இந்த வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நினைத்திருந்தார்.

ரெயில் பயணத்தின்போது அவ்வப்போது கண்விழித்து நகைப்பையை இருக்கிறதா? என்று சோதித்து பார்த்து பிரபுகுமார் திருப்தி அடைந்து கொண்டார். ஆனால் ‘காப்பானை விட கள்ளனே பெரியவன்’ என்பது பிரபுகுமாரின் வாழ்க்கையில் உண்மையாகி போனது.

சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவு ஆந்திராவில் உள்ள ஓங்கோல் ரெயில் நிலையத்தை தாண்டி செல்கையில், பிரபுகுமார் தன் தலையணை அடியில் வைக்கப்பட்டிருந்த கைப்பையை சோதித்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கைப்பையை காணவில்லை.

இதனால் பதறிப்போன பிரபுகுமார், மனைவி கோமளாவுடன் ரெயில் பெட்டி முழுவதும் தேடி அலைந்தார். நகைப்பை கிடைக்காததால் தம்பதியினர் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து ‘சென்னையில் இறங்கியதும் போலீசில் புகார் செய்யுங்கள்’ என்று சக பயணிகள் கூறியதை தொடர்ந்து சோகத்துடன் அமைதியானார்கள்.

இந்த நிலையில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 8.15 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து பிரபு குமார்-கோமளா தம்பதியினர் உடனடியாக சென்டிரல் ரெயில்வே போலீஸ் நிலையம் சென்றனர். ரூ.30 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் தொலைந்து போனது குறித்து புகார் செய்தனர். உடனடியாக சென்டிரல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த சம்பவம் ஆந்திராவில் உள்ள ஓங்கோல்-காவலி இடையே நடந்துள்ளதாக சந்தேகிக்கிறோம். எனவே சட்டப்படி இந்த வழக்கு ஓங்கோல் ரெயில்வே போலீசாருக்கு மாற்றப்பட இருக்கிறது” என்றார்.

கடந்த 9-ந் தேதி, காக்கிநாடா-செங்கல்பட்டு இடையே இயக்கப்பட்ட சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணின் தாலி சங்கிலி, வளையல் உள்ளிட்ட 32 பவுன் நகைகள் திருட்டு போனது.

நகைகளை பத்திரமாக பையில் வைத்திருந்த விஜயலட்சுமி, தூக்க கலக்கத்தில் இருந்தபோது அவரிடம் மர்ம நபர்கள் தங்கள் கைவரிசையை காட்டிவிட்டு தப்பிவிட்டனர். இந்த சம்பவம் ஆந்திரா மாநிலம் ஓங்கோல் அருகே நடந்தது. தற்போது அதே பகுதியில் மீண்டும் ஒரு ரெயில் திருட்டு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

எனவே ஆந்திரா மார்க்கமாக ரெயில் செல்லும்போது குறிப்பிட்ட நபர்கள் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். குறிப்பாக தமிழர்களை குறிவைத்தே இந்த சம்பவங்கள் நடந்து வருகின்றன. கைதேர்ந்த வெளிமாநில திருடர்கள்தான் தொடர் ரெயில் திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது. எனவே ரெயில்வே போலீசார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.