Breaking News
ஆஷா, அங்கன்வாடி பணியாளர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு – பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடு முழுவதும் உள்ள மத்திய சுகாதார பணியாளர்களான ஆஷா, அங்கன்வாடி, ஏ.எம்.என். (துணை செவிலியர்கள்) ஊழியர்கள் ஒரு லட்சம் பேருடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

ஆஷா பணியாளர்களின் வழக்கமான ஊக்கத்தொகை உயர்த்தப்படும். அதோடு ஆஷா பணியாளர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் பிரதமரின் இலவச காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். அதேபோல அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியமும் அதிகரிக்கப்படும்.

அதன்படி இதுவரை மாதம் ரூ.3 ஆயிரம் பெற்றுவந்தவர்களுக்கு இனி ரூ.4,500 கிடைக் கும். அதேபோல மாதம் ரூ.2,200 பெற்றவர்களுக்கு இனி ரூ.3,500 கிடைக்கும். அங்கன்வாடி உதவியாளர்களின் மதிப்பூதியமும் ரூ.1,500-ல் இருந்து ரூ.2,250 ஆக உயர்த்தப்படும். இந்த உயர்வுகள் அடுத்த மாதம் முதல் அமல் படுத்தப்படும்.

அதுமட்டுமின்றி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களில் ஐ.சி.டி.எஸ். அப்ளிகேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகையாக ரூ.250 முதல் ரூ.500 வரை அவர்களது செயல்திறனுக்கு ஏற்ப வழங்கப்படும்.

ஆஷா, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதார பயனாளிகள் தான் தேசத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பலமில்லாத அஸ்திவாரத்தின் மீது வலுவான கட்டிடத்தை கட்டமுடியாது. அதேபோல தான் நாட்டின் குழந்தைகள் பலமில்லாதவர்களாக இருந்தால் நாட்டின் முன்னேற்றமும் குறையும்.

3 கோடி குழந்தைகள் மற்றும் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தரமான, சுகாதாரமான மகப்பேறு மற்றும் போதுமான ஊட்டச்சத்து ஆகியவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

ஒவ்வொரு மகப்பேறுக்கு பின்னரும் ஆஷா பணியாளர்கள் அந்த குழந்தைகளை 42 நாட்களில் 6 முறை நேரில் பார்த்துவந்தனர். இனி 15 மாதங்களில் 11 முறை அவர்கள் குழந்தைகளை நேரில் சென்று கவனிப்பார்கள். குழந்தைகளின் வாழ்க்கையில் முதல் ஆயிரம் நாட்கள் மிகவும் முக்கியம். உங்கள் அர்ப்பணிப்பு சிறந்த குடிமக்களை உருவாக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.