Breaking News
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, பிரனாய் வெற்றி

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, வீரர் பிரனாய் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பி.வி.சிந்து வெற்றி
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நேற்று தொடங்கியது. 16–ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முன்னணி வீரர்–வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.

தொடக்க நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக தரவரிசையில் 3–வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 13–ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சயகா தகஹாஷியை சந்தித்தார். 53 நிமிடம் அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21–17, 7–21, 21–13 என்ற செட் கணக்கில் சயகா தகஹாஷியை வீழ்த்தி 2–வது சுற்றுக்கு முன்னேறினார். 2–வது சுற்றில் சிந்து, சீன வீராங்கனை பான்ஜிவ் காவை எதிர்கொள்கிறார்.

பிரனாய் அபாரம்
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 13–வது இடத்தில் உள்ள இந்திய வீரர் பிரனாய் 21–18, 21–17 என்ற நேர்செட்டில் அண்மையில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தோனேஷியா வீரர் ஜோனதன் கிறிஸ்டியை வீழ்த்தி 2–வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த வெற்றியை பெற பிரனாய்க்கு 45 நிமிடமே தேவைப்பட்டது.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 8–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21–13, 21–15 என்ற நேர்செட்டில் சீன வீரர் யுஜியாங் ஹூயாங்கை தோற்கடித்து 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 18–21, 22–20, 10–21 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் லீ டாங் குன்னிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 1 மணி 23 நிமிடம் நீடித்தது.

அஸ்வினி ஜோடி தோல்வி
கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா–சிக்கி ரெட்டி ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. இதேபிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி–அஸ்வினி பொன்னப்பா ஜோடி முதல் சுற்றுடன் நடையை கட்டியது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.