இன்று விநாயகர் சதுர்த்தி: மக்கள் அனைத்து நலன்கள், வளங்கள் பெற வேண்டும் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
மக்கள் அனைவரும் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற வேண்டும் என்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஞான முதல்வனாகிய விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை தம் திருவுருவாய் கொண்ட விநாயகப் பெருமானின் திருஅவதார தினமான இந்நன்னாளில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து, அருகம் புல், எருக்கம் பூ, செம்பரத்திப் பூ, வில்வ இலை போன்றவைகளைக் கொண்டு பூஜை செய்து, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், கரும்பு, பழங்கள் போன்றவற்றை படையலிட்டு, மக்கள் விநாயகர் சதுர்த்தி திருநாளை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.
“வேழ முகத்து விநாயகனைத் தொழ, வாழ்வு மிகுந்து வரும்” என்பதற்கேற்ப, விநாயகப் பெருமானின் திருவருளால் மக்கள் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.