Breaking News
ஊடகங்கள் அனைத்தும் அரசின் திட்டங்களை மக்களிடம் சேர்க்கும் பாலமாக இருக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

‘நியூஸ்-ஜெ’ என்ற தொலைக்காட்சி லோகோ அறிமுகம், இணையதளம் மற்றும் செயலி தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இந்த அரசு செயல்படுத்தும் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும் பாலமாக இந்தத் தொலைக்காட்சி அமையும் என்று நாங்கள் கருதுகிறோம்.

எல்லா கட்சிகளுமே தொலைக்காட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும், தமிழகத்திலே அரசு மேற்கொள்ளும் திட்டங்களை முழுமையாக மக்களுக்கு கொண்டு செல்லவில்லை. நியூஸ்-ஜெ தொலைக்காட்சி அதை முழுமையாக கொண்டு செல்லும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஒரு தொலைக்காட்சியை உருவாக்கினார். ஆனால், இன்று அந்தத் தொலைக்காட்சி யாரிடம் செல்லக்கூடாது என்று நினைத்தோமோ அவர்களிடத்திலே சென்று விட்டது. இந்த அரசின் திட்டங்கள், அ.தி.மு.க.வின் பொதுக்கூட்டங்கள் எல்லாம் நியூஸ்-ஜெ தொலைக்காட்சி மூலமாக வெளிவர இருக்கிறது.

எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் ஒரு சிறு பிரச்சினையைச் சொன்னாலே அதை நாள் முழுவதும் மாற்றி, மாற்றி காட்டிக் கொண்டிருப்பார்கள். நாம் மக்களுக்கு செய்யும் நன்மைகளை மக்களிடத்திலே சேர்ப்பது கடினம்.

அனைத்து ஊடகங்களும் இனிமேல் அரசு மேற்கொள்ளும் நல்ல பல திட்டங்களை பாலமாக இருந்து மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “விஞ்ஞான வளர்ச்சியின் புது வரவாக, “நியூஸ்-ஜெ” அலைவரிசைத் தொலைக்காட்சி (சாட்டிலைட் சேனல்) தொடங்க இருக்கிறது.

“நியூஸ்-ஜெ” தொலைக் காட்சி எப்போது சோதனை ஓட்டத்தை தொடங்கும், அந்த சோதனை ஓட்டம் முடிந்து தனது நிகழ்ச்சிகளை எப்போது முழுமையாகத் ஆரம்பிக்கும் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வின் அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி. வைத்திலிங்கம் எம்.பி., அமைப்புச் செயலாளர் பொன்னையன் மற்றும் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நியூஸ்-ஜெ தொலைக்காட்சி மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணன் (அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன்) வரவேற்றார். தொலைக்காட்சி நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தினேஷ் (அமைச்சர் தங்கமணியின் உறவினர்) உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த மாதத்தில் 10 லட்சம் மரக்கன்றுகளையும், மொத்தத்தில் ஒரு கோடி மரக்கன்றுகளையும் நடுவதற்கு நியூஸ்-ஜெ தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளது. சிறுவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி அதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

www.newsj.tv என்ற இணையதளத்தில் நியூஸ் ஜெ ஒளிபரப்பை காணலாம். செல்போனில் இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்தும் செய்திகளைப் பார்க்க முடியும். நியூஸ் ஜெ டி.வி.யின் லோகோ, தமிழர்களின் உரிமைக்குரல் என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.