Breaking News
நாடாளுமன்றத்தில் நடந்து சென்றபோது விஜய் மல்லையா என்னிடம் பேசினார் – அருண் ஜெட்லி

விஜய் மல்லையா பேட்டி குறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது:-

கடனை திருப்பிச் செலுத்துவதற்கான தீர்வுடன் என்னை சந்தித்ததாக விஜய் மல்லையா கூறியது பற்றி எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அவர் கூறியது பொய். அது, உண்மையை பிரதிபலிக்கவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு நான் மத்திய மந்திரி ஆனதில் இருந்து, என்னை சந்திக்க அவருக்கு நான் நேரம் ஒதுக்கியதே இல்லை. எனவே, அவர் என்னை சந்தித்தார் என்ற கேள்வியே எழவில்லை. அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். எப்போதாவது சபைக்கு வருவார்.

ஒருதடவை நான் நாடாளுமன்ற கூட்டத்தில் இருந்து வெளியே வந்து, எனது அறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது, மாநிலங்களவை உறுப்பினர் என்ற தகுதியை தவறாக பயன்படுத்தி, என்னை நோக்கி வேகமாக வந்தார். “கடன் தீர்வுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன்” என்று நடந்தபடியே கூறினார்.

அவர் முன்பே பலதடவை இதுபோல் ஏமாற்றி இருப்பதால், மேற்கொண்டு அந்த உரையாடலை வளர்க்க விரும்பாமல், நான் குறுக்கிட்டேன். “என்னிடம் பேசுவதில் அர்த்தம் இல்லை. வங்கிகளை அணுகுங்கள்” என்று அவரிடம் கூறினேன். அவரது கையில் வைத்திருந்த ஆவணங்களைக் கூட நான் வாங்கவில்லை.

மாநிலங்களவை உறுப்பினர் என்ற பதவியை தவறாக பயன்படுத்தி அவர் மேற்கொண்ட இந்த ஒரு வார்த்தை பரிமாற்றத்தை தவிர, என்னை சந்திக்க அவருக்கு நான் அனுமதி அளித்தது இல்லை. அந்த கேள்விக்கே இடமில்லை. இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.