Breaking News
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 42 பேருக்கு பணி நியமன ஆணை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, திருப்பூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் தாராபுரம் சாலை சந்திப்பு அருகில் அவினாசி – திருப்பூர் – பல்லடம் – பொள்ளாச்சி – கொச்சின் (வழி) மீன்கரை சாலையில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 14-ந் தேதி (நேற்று) தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மேலும், காஞ்சீபுரம் மாவட்டம், சட்ராஸ் அருகே சட்ராஸ்-செங்கல்பட்டு-காஞ்சீபுரம்-அரக்கோணம்-திருத்தணி சாலையில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் விளம்பூர் அருகே சாலை வளைவில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு உருளை தடுப்பு;

திருவள்ளூர் மாவட்டம், குருவாயல் – அழிஞ்சிவாக்கம் இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம்; தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி – செங்கிப்பட்டி – பட்டுக்கோட்டை சாலையில், நம்பிவயல் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள பாலம்;

தர்மபுரி, கோவை மாவட்டம்

தர்மபுரி மாவட்டம் அ.பள்ளிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள பாலம்; நாமக்கல் மாவட்டம் சில்லாங்காட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; ஈரோடு மாவட்டம், பெரும்பள்ளத்தில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் கொம்பனைபுதூரில் கட்டப்பட்டுள்ள பாலம்;

கோயம்புத்தூர் மாவட்டம், ரெட்டியார்மடம் – ஆண்டியூர் சாலையில் கட்டப்பட்டுள்ள பாலம்; சென்னை, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள நெடுஞ்சாலை இல்லம், என மொத்தம், ரூ.83.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டவற்றை முதல்-அமைச்சர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

பணி நியமன ஆணை

பூந்தமல்லி அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டும் பயிற்சி முடித்துள்ள நபர்களில், சிறப்பு நேர்வாக விதிகளை தளர்வு செய்து, புத்தகம் கட்டும் பயிற்சி முடித்த ஆண்டின் முதுநிலை வரிசைப்படி 42 நபர்களுக்கு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் அரசு அச்சகங்களில் “இளநிலை புத்தகம் கட்டுனர்” பதவியில் பணி நியமனம் வழங்கி அரசு ஆணையிட்டது.

பயிற்சி முடித்த 42 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் அரசு அச்சகங்களில் இளநிலை புத்தகம் கட்டுனர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.