சீன எல்லையில் படை குறைப்பு இல்லை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் படைகள் குறைக்கப்பட மாட்டாது என மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச் சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, “வுஹான் நகரில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்தியபோது, எல்லையில் இருதரப்பு வீரர்களும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதை அந்நாட்டு வீரர்கள் கடைபிடிப்பார்கள் என்று நம்புகிறேன். நமது வீரர்களும் அமைதி காப்பார்கள். அதேநேரம், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், எல்லையில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வீரர்களுக்கு அறுவுறுத்தி உள்ளேன். குறிப்பாக எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது” என்றார்.
டோக்லாம் எல்லையில் ஏற்பட்ட பிரச்சினைக்கு பிறகு சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை வுஹான் நகரில் சந்தித்துப் பேசினார். அப்போது, டோக்லாம் போன்ற பதற்றம் மீண்டும் ஏற்படுவதை தவிர்க்கவும் இருதரப்பு உறவை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
எல்லையில் இரதரப்பு ராணுவ வீரர்களும் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில், கடந்த மாதம் இந்தியா வந்திருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங்கே, நிர்மலா சீதாராமனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டோக்லாம் போன்ற பிரச்சினையை தவிர்க்க, இருதரப்பு ராணுவத்துக்கிடையே பேச்சுவார்த்தை நடத்துவதை அதிகரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.