தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதனோடு தொடர்புடைய காற்றழுத்த தாழ்வுநிலை, வட தமிழக பகுதியில் நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடியுடன் மழை அல்லது கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 13 செமீ, ஸ்ரீவில்லிபுத்தூர், விரிஞ்சிபுரம், ஆரணி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஆகிய இடங்களில் தலா 7 செமீ, சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, விழுப்புரம் மாவட்டம் வானூர், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.