Breaking News
தொடக்க ஆட்டத்தில் இலங்கை படுதோல்வி: 144 ரன்கள் குவித்த முஷ்பிகுர் ரஹிமுக்கு கேப்டன் மோர்தசா பாராட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக 144 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட வங்காளதேச பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹிமை, கேப்டன் மோர்தசா வெகுவாக பாராட்டியுள்ளார்.

இலங்கை தோல்வி
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் வங்காளதேச அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை நொறுக்கியது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 49.3 ஓவர்களில் 261 ரன்கள் சேர்த்து ஆல்–அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 144 ரன்களும் (11 பவுண்டரி, 4 சிக்சர்), முகமத் மிதுன் 63 ரன்களும் விளாசினர்.

அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி 35.2 ஓவர்களில் 124 ரன்களில் சுருண்டது. வங்காளதேசத்துக்கு எதிராக இலங்கையின் குறைந்த ஸ்கோர் இதுவாகும். இலங்கை அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட 30 ரன்களை தொடவில்லை. அத்துடன் வெளிநாட்டு மண்ணில் வங்காளதேசம் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகவும் (137 ரன் வித்தியாசம்) இது பதிவானது.

மோர்தசா கருத்து
வெற்றிக்கு பிறகு வங்காளதேச கேப்டன் மோர்தசா கூறுகையில், ‘முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் மிகுந்த நெருக்கடிக்குள்ளானோம். அதன் பிறகு முஷ்பிகுர் ரஹிமும், மிதுனும் பேட்டிங் செய்த விதத்தை பார்க்கவே சிறப்பாக இருந்தது. குறிப்பாக முஷ்பிகுர் ரஹிம் நிறைவு செய்த விதம் அருமை. நெருக்கடிக்கு மத்தியில் முஷ்பிகுர் ரஹிம் குவித்த 144 ரன்கள், ஒரு நாள் கிரிக்கெட்டில் வங்காளதேச பேட்ஸ்மேனின் சிறந்த இன்னிங்சில் ஒன்றாகும்.

காயத்தையும் பொருட்படுத்தாமல் கடைசி விக்கெட்டுக்கு களம் இறங்கி தமிம் இக்பால் ஒற்றைக்கையால் பேட் செய்தது அவரது தைரியத்தை காட்டுகிறது. இது அவரே எடுத்த முடிவு. நாங்கள் வற்புறுத்தவில்லை. அவரை வங்காளதேச மக்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். மிதுன் முக்கியமான கட்டத்தில் அவுட் ஆகி விட்டார். இல்லாவிட்டால் 280 முதல் 290 ரன்கள் வரை எடுத்திருப்போம். இன்னும் சில பகுதிகளில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. துபாய்க்கு வந்து எங்களை உற்சாகப்படுத்திய வங்காளதேச ரசிகர்களுக்கு நன்றி. இந்த ஆதரவு தொடர் முழுவதும் நீடிக்க வேண்டும். இது உங்களுக்குரிய (ரசிகர்கள்) வெற்றி தான்’ என்றார்.

மேத்யூஸ் புலம்பல்
இலங்கை கேப்டன் மேத்யூஸ் கூறுகையில், ‘ஒட்டுமொத்த அணியின் மோசமான செயல்பாடு இதுவாகும். 3 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை (தமிம் இக்பால் காயத்தையும் சேர்த்து) வீழ்த்திய போதிலும், சில கேட்ச்களை தவறவிட்டதன் மூலம் எங்களது பிடியும் நழுவிப் போனது. மலிங்காவை நான் மிடில் ஓவர்களில் பயன்படுத்தி இருக்க வேண்டும். முஷ்பிகுர் ரஹிம் உண்மையிலேயே அபாரமாக பேட் செய்தார். நாங்கள் பேட்டிங்கின் போது நிறைய தவறுகளை செய்து விட்டோம். இது பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளமாகும். 262 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து விட முடியும் என்று நினைத்தேன். ஆனால் பேட்டிங்கில், கணித்து ஷாட்டுகளை அடிப்பதில் தவறிழைத்து விட்டோம். இந்த வகையில் ஒட்டுமொத்த பேட்டிங் குழுவும் சொதப்பியது. முதல் 10 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்த போது, எந்த பேட்ஸ்மேனாவது நிலைத்து நின்று விளையாடி அணியை தூக்கி நிறுத்தியிருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அதை செய்ய முடியாமல் போய் விட்டது’ என்றார்.

ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட வங்காளதேச வீரர் முஷ்பிகுர் ரஹிம் கூறுகையில், ‘அடுத்த சுற்றுக்கு முன்னேற இரண்டு லீக்கிலும் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். மிதுன் நன்றாக ஆடினார். எனக்குள் இருந்த நெருக்கடியையும் தணித்தார். கைமணிக்கட்டில் ஏற்பட்ட எலும்பு முறிவோடு தமிம் இக்பால் பேட் செய்ய இறங்கிய போது ஆச்சரியப்பட்டேன். அவருக்காகவும், தேசத்திற்காகவும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் ஏற்பட்டது. பெரிய ஸ்கோர் குவித்து அணியின் வெற்றிக்கு உதவியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.