உசிலம்பட்டி அருகே பெண் குழந்தை என்பதால் வீட்டில் கருக்கலைப்பு: 5 மாத கர்ப்பிணி மரணம்; செவிலியர் கைது
உசிலம்பட்டி அருகே வீட்டில் கருக்கலைப்பு செய்தபோது, 5 மாத கர்ப்பிணி மரணம் அடைந்தார். இது தொடர்பாக தனியார் மருத்துவமனை செவிலியரைப் போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராமுத்தாயி(28). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 4-வது முறையாக ராமுத்தாயி கர்ப்பம் அடைந்தார். அவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில் கர்ப்பத்தைக் கலைக்க உசிலம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை செவிலி யரான தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த லட்சுமி(32) என்பவரை ராமர் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு அழைத்து வந்தார்.
ராமுத்தாயிக்கு கருவை கலைக்கும்போது ரத்தப்போக்கு அதிகமானது. இதில் அவர் மயக்கம் அடைந்தார். சில மருந்துகளை கொடுத்தபோதும் அவரது உடல் நிலை மிகவும் மோசமானது. அதிகாலையில் ராமுத்தாயி மரணம் அடைந்தார்.
தகவலறிந்த உசிலம்பட்டி தாலுகா போலீஸார் லட்சுமியை பிடித்து விசாரித்தனர். மருத்துவமனையில் சேர்த்து கருவைக் கலைக்க முடியாத நிலையில் தம்மை அணுகியதாகவும், கருவை கலைக்கும்போது, அதிக ரத்தப் போக்கு காரணமாக ராமுத்தாயி உயிரிழந்திருக்கலாம் எனவும் அவர் கூறினார். இதைத் தொடர்ந்து லட்சுமியை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறியது: கர்ப்பத்தில் இருப்பது பெண் குழந்தை என பரிசோதனையில் தெரிந்தது. மருத்துவமனையில் கலைக்க அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் வீட்டிலேயே கருக்கலைப்பு செய்துள்ளனர் என்றனர்.