Breaking News
எச்.ராஜா அக்டோபர் 3-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் அட்வகேட் ஜெனரல் நோட்டீஸ்

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சீபுரம் மாவட்ட செயலாளராக இருப்பவர் எம்.கண்ணதாசன். இவர், தன் வக்கீல் வி.இளங்கோவன் மூலம், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்துகொண்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, ஐகோர்ட்டையும், போலீசாரையும் மிகவும் கடுமையான வார்த்தையால் விமர்சனம் செய்துள்ளார்.

வினய்சந்திரா மிஸ்ரா வழக்கில் 1995-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், ‘ஜனநாயகத்தில் உள்ள 4 தூண்களில், நீதித்துறை என்ற 3-வது தூண் மிகவும் முக்கியமானது. அதுதான், ஜனநாயகம் என்ற அமைப்பை தாங்கி பிடிக்கும் மத்தியில் உள்ள தூண். இருக்கின்ற அனைத்து சட்டங்களையும் பாதுகாக்கும் பாதுகாவலராகவும் நீதித்துறை திகழ்ந்து வருகிறது. அப்படிப்பட்ட அமைப்புக்கு உள்ள கண்ணியத்தையும், மரியாதையையும் பாதுகாக்கவில்லை என்றால், ஜனநாயகம் என்ற அமைப்பின் முக்கிய கற்கள் அகற்றப்பட்டுவிடும். நாகரிகமான சமுதாயம் காணாமல் போய்விடும்’ என்று கூறியுள்ளது.

அதேபோல, கேரளா ஐகோர்ட்டு தீர்ப்பை முட்டாள் தனமானது என்றும், தகுதி இல்லாதது என்றும் கருத்து தெரிவித்தவருக்கு பச்சாதாபம் காட்ட முடியாது என்று கேரளா ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் கருத்து தெரிவித்துள்ளது.

பொதுசாலையில் மேடை அமைக்கக்கூடாது என்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டும், அந்த உத்தரவை மீறி செயல்பட்டது மட்டுமல்லாமல், ஐகோர்ட்டின் கண்ணியத்தையும், மரியாதையையும் தரம் தாழ்த்தி எச்.ராஜா பேசியுள்ளார்.

இவரது செயல் கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும். எச்.ராஜா மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் முக்கிய பொறுப்பில் உள்ளார். பிரதமர் நரேந்திரமோடிக்கு மிகநெருக்கமானவர் என்பதால் ஐகோர்ட்டு உத்தரவையும், கண்ணியத்தையும் ஒரு பொருட்டாகவே இவர் மதிக்கவில்லை.

மேலும், இவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் பயப்படுகின்றனர். எனவே, எச்.ராஜா மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனுவை அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் பெற்றுக்கொண்டார். பின்னர், இந்த புகார் மீதான விசாரணைக்கு எச்.ராஜா அக்டோபர் 3-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள மெய்யபுரத்தை சேர்ந்த வைத்தியலிங்கம், சொக்கலிங்கம், பெருமாள், ராதாகிருஷ்ணன், அய்யனார்புரத்தை சேர்ந்த ரத்தினம் ஆகிய 5 பேரும் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

அதில், கடந்த 15-ந் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக திருமயம் போலீசார் பதிவு செய்த வழக்கில் கூறப்பட்டுள்ள சம்பவத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத பலர் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் எங்களையும், எங்களது கிராமத்தினரையும் போலீசார் கைது செய்ய முயற்சி செய்கிறார்கள். மெய்யபுரம் கிராம மக்கள் சட்டத்தை மதித்து நடப்போம். எனவே எங்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த மனு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.