சென்னையில் மின்சார பஸ்கள் இயக்க திட்டம்: லண்டனில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சென்னை மாநகர பொதுமக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் மாநகர போக்குவரத்து கழகம் பெரும்பங்காற்றி வருகிறது. காற்று மாசுபடுவதை குறைக்கிற வகையில் மேலை நாடுகளில் முன்னேறிய மாநகரங்களை உறுப்பினர்களாக கொண்டு, லண்டன் மாநகரத்தில் சி-40 என்ற முகமை இயங்கி வருகிறது.
அந்த முகமையின் வழிக்காட்டுதலின்படி, சென்னையில் மின்சாரம்- மின்கலன் பஸ் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறைக்கும், சி-40 முகமைக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கிற வகையிலும், குறைந்த விலையிலும் மின்சார பஸ்களை கொள்முதல் செய்தல், புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்துதல், மின்சார பஸ்களை திறம்பட இயக்க சாலை வரைபடம் தயாரித்தல், தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இம்முகமையானது தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறைக்கு உதவிகளை வழங்கும்.
இத்திட்டத்தை செயல்படுத்துகிற வகையில் சி-40 முகமையின் வெளிநாட்டு பிரதிநிதிகள் கடந்த மாதம் சென்னையில் முகாமிட்டு போக்குவரத்து, நிதி, எரிசக்தி துறையின் உயர்மட்ட அரசு அலுவலர்களை சந்தித்து கலந்தாய்வு மேற்கொண்டனர்.
மாநகர போக்குவரத்துக்கழக அடையாறு பணிமனையில் ஆய்வு செய்து போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகளை அறிந்து கொண்டதோடு, அமெரிக்கா, இங்கிலாந்தில் நடைபெறும் கருத்தரங்குகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர், கூடுதல் தலைமை செயலாளர் ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.
இதை ஏற்று, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரசு கூடுதல் தலைமை செயலாளர் பி.டபுள்யு.சி.டேவிதார் ஆகியோர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மின்சாரத்தால் இயங்கும் பஸ்சை பார்வையிட்டனர். லண்டன் போக்குவரத்து அமைப்பின் தலைவர் டாம் குன்னிங்டனை சந்தித்து பஸ்களை இயக்குதல், நிர்வகித்தல், செயல்படுத்துவதில் உள்ள பல்வேறு நுணுக்கங்கள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொண்டனர். மின்சார பஸ் பணிமனைகள் அமைப்பதில் பெரிதும் பங்காற்றி வரும், லண்டன் போக்குவரத்து அமைப்பின் ஆலோசகர் மைக் வெஸ்டனை சந்தித்தனர்.
பின்னர் லண்டன், வாட்டர்லூவில் செயல்படும் மின்சார பஸ் பணிமனையை பார்வையிட்டு பஸ்கள் இயக்கம், பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
இறுதியாக, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் போக்குவரத்து தொடர்பாக பிரேம் பார்த்தசாரதி, பொன்டாக் ஆகியோருடனும் கலந்தாலோசித்தனர். சி-40 முகமையின் உதவியோடு விரைவில் சென்னையில் மின்சார பஸ்கள் இயங்க இந்த பயணம் பெரிதும் பயன் தரும் வகையில் இருந்ததாக சி-40 முகமையின் ஏற்பாட்டாளர்களிடம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.