Breaking News
“இம்ரான் கான் உண்மையான முகம் வெளிப்பட்டது” பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது

தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இருபெரும் அணு ஆயுத நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் பரம எதிரிகளாக இருந்து வருகின்றன. எனினும் இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா விரும்புகிறது.

ஆனால் இதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும்போதெல்லாம், பாகிஸ்தான் ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. குறிப்பாக பதான்கோட் விமானப்படை தளம் மற்றும் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் சமீபத்திய ஆண்டுகளில் நடத்திய தாக்குதல்களால் இரு நாட்டு அமைதி பேச்சுவார்த்தை தடைபட்டு உள்ளது. அது மட்டுமின்றி இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்ததும், காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் அத்துமீறிய தாக்குதல்களும் பேச்சுவார்த்தைக்கான சூழலை முற்றிலும் முடக்கி இருக்கிறது.

ஒருபுறம் பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேறும்போது மறுபுறம் பேச்சுவார்த்தை நடத்துவது முறையல்ல எனக்கூறி இருநாட்டு பேச்சுவார்த்தைக்கு இந்தியா தற்போது மறுத்து வருகிறது. பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச முடியும் என கண்டிப்பாக கூறி வரும் இந்தியா, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என சர்வதேச நாடுகளையும் வலியுறுத்தி வருகிறது. இதை ஏற்று பல்வேறு உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த சூழலில்தான் பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான புதிய அரசு கடந்த மாதம் பதவியேற்றது. ஆட்சிக்கு வந்தது முதலே அவர், இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்து வந்தார். இதன் தொடர்ச்சியாக இரு நாட்டு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதினார். இம்ரான் கோரிக்கையை இந்தியா ஏற்றது. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின்போது பாகிஸ்தான் மந்திரியை சந்திக்கிறார் என தெரிவிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை ரத்து

இந்நிலையில் “இம்ரான் கான் உண்மையான முகம் வெளிப்பட்டது” என்றுகூறி பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தை தொடர்பாக அறிவிப்பு வெளியாகி 24 மணி நேரங்கள் ஆன நிலையில் பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் மூன்று போலீஸ் அதிகாரிகளை பயங்கரவாதிகள் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். இதனையடுத்து பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. “இம்ரான் கான் ஆட்சிக்கு வந்து ஒருமாதத்தில் அவருடைய உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது,” என இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.