Breaking News
காவல்துறை அதிகாரிகள் என்னை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினர் -வனிதா விஜயகுமார்

பிரபல நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பிரம்மாண்டமான பங்களா வீடு மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் அஷ்ட லட்சுமி நகர் 19-வது தெருவில் உள்ளது. இதனை அவர் படப்பிடிப்புக்காக வாடகைக்கு விட்டு வந்தார்.

இவரது மூத்த மகள் நடிகை வனிதா புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார். இதற்காக படப்பிடிப்பு நடத்த அவர் கடந்த வாரம் தந்தை விஜயகுமாரிடம் பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்தார்.

படப்பிடிப்பு முடிந்தும் வனிதா அந்த வீட்டை காலி செய்ய மறுத்துவிட்டார். மேலும் வீட்டில் தனக்கும் பங்கு உள்ளது என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் விஜயகுமாருக்கும், மகள் வனிதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து விஜயகுமார் மதுரவாயல் போலீசில் வனிதா மீது புகார் அளித்தார்.

நேற்று மாலை சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனையும் சந்தித்து புகார் மனு அளித்தார். அப்போது வீடு தொடர்பான சொத்து ஆவணங்களையும் கொடுத்தார்.

இது தொடர்பாக உதவி கமி‌ஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். வனிதாவிடம் வீடு தொடர்பான ஆவணங்களை கொடுக்கும்படி தெரிவித்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் எந்த ஆவணத்தையும் கொடுக்கவில்லை.

இதையடுத்து நேற்று இரவு போலீசார் அதிரடியாக சர்ச்சைக்குரிய பங்களா வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது அங்கிருந்த நடிகை வனிதாவை போலீசார் வலுக் கட்டாயமாக வெளியேற்றினர்.

மேலும் வீட்டில் அத்துமீறி தங்கியிருந்த கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த நரேந்திரன், ஆண்ட்ரூஸ், வடபழனியை சேர்ந்த ஜோசப் மனோஜ், திருவேங்காடு பாலா, சைதாப்பேட்டை சத்திய சீலன், நெற்குன்றம் தியாகராஜன், காஞ்சீபுரம் மணிவர்மா ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

அனைவரையும் வெளியேற்றிய பின்னர் பங்களா வீட்டை போலீசார் பூட்டு போட்டு பூட்டினர். அதன் சாவியை நடிகர் விஜயகுமாரிடம் ஒப்படைத்தனர்.

வனிதா மீது கொலை மிரட்டல், அத்துமீறி நுழைந்து வீட்டை சேதப்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நிருபர்களுக்கு வனிதா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

அம்மாவுடன் இருப்பதுபோல் உணர்வதால் வீட்டில் தங்கியிருந்தேன்; வீட்டில் இருந்து தந்தை விஜயகுமார் விரட்டுகிறார் வேறு ஒருவருக்கு வீட்டை வாடகை விடுவதற்காக என்னை வெளியே அனுப்ப முயற்சி செய்கிறார்.

வீட்டுக்கான வாடகை கொடுக்கிறேன் என்று சொல்லியும் எனது தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை காவல்துறை அதிகாரிகள் என்னை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினர் என கூறி உள்ளார்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.