Breaking News
“ராஜீவ் காந்தியை நான் கொலை செய்யவில்லை” – ராஜ்நாத் சிங்குக்கு சாந்தன் கடிதம்

1991 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதி, ஸ்ரீ பெரும்புதூரில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில், ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர், கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த 7 பேரில் ஒருவரான சாந்தன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு 4 பக்க உருக்கமான கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடித விவரம் வருமாறு:-

நான் சுதேந்திரராஜா என்கிற சாந்தன். உண்மையை சொல்லி விடுகிறேன். ராஜீவ்காந்தி கொலை சதி திட்டத்தோடு இந்தியாவிற்குள் நுழையவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு போவது தான் என் நோக்கம்.

அந்த காலக்கட்டத்தில் இலங்கை தமிழர்கள் பலரும் தலைநகர் கொழும்பு வழியாக பயணிக்காமல் இங்கு வந்து தான் வெளிநாடுகளுக்கு பயணிப்பது வழக்கமாக கொண்டிருந்தனர். அப்படித்தான் நானும் வந்தேன். இங்குவரும் போது இலங்கையில் என் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என்று அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்ட பிறகு எனக்கு அளிக்கப்பட்ட பாஸ்போர்ட்டுடன் தான் வந்தேன். இது சி.பி.ஐ. வசமானது. பாஸ்போர்ட்டை வைத்தே நான் இலங்கை குடிமகன் என நிரூபிக்கப்பட்டது.

சர்வதேச அளவில் பிரபலமான ஒரு தலைவரை கொல்ல வரும் வெளிநாட்டவன் யாராவது தன்னை பற்றிய உண்மையான தகவல்கள் அடங்கிய பாஸ்போர்ட்டை கொண்டு வருவானா?,

இந்த வழக்கில் இன்னொரு குற்றவாளியாக சாந்தனும் காட்டப்பட்டுள்ளார். தடா நீதிமன்றத்தில் சி.பி.ஐ. வக்கீல் வாதிடும்போது, விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளருக்கு நான் பணம் கொடுத்ததாக சொன்னார். பணம் பெற்ற விடுதலை புலி ஆதரவாளர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும்போது என்னை அடையாளம் காட்டவில்லை. இன்னொரு சாந்தனின் போட்டோவை காட்டினார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் பக்கம் 558-ல், இந்த வழக்கில் 19-வது எதிரியாக சேர்க்கப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்ட ஒருவரிடம், விரைவில் ஒரு முக்கியமான தலைவரை கொல்லப்போவதாக நான் சொன்னதாக பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால், பக்கம் 157-ல் அது அடுத்த சாந்தன் என்றிருக்கும். இப்படி பல குளறுபடிகள் தீர்ப்பில் உள்ளன.

புலனாய்வு அதிகாரிகள் இப்போது சொல்லும் உண்மையை பற்றியோ, 1999-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள தவறுகள் பற்றியோ நான் இப்போது வெளிக்கொணர விரும்பவில்லை. பழையவற்றை புறந்தள்ளிவிட்டு பயணப்படவே விரும்புகிறேன்.

2011-ம் ஆண்டில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டபோது நோயாளியான என் அப்பா, தூக்கு தண்டனை ரத்து என்ற 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை அறியும் முன்னரே இறந்துவிட்டார். வயோதிக தாயாருக்காவது மகனுக்கான கடமைகளை செய்ய விரும்புகிறேன். என்னுடைய உறவுகளுடன் என்னை சேர்த்து வைக்க மத்திய அரசால் முடியும்.

என்னுடைய சிரமம் மிகுந்த சிறை வாழ்க்கையை சிதறடிக்க உதவுங்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் சாந்தன் எழுதி உள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.