Breaking News
பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அச்சுதானந்த் மிஸ்ரா, 2006-ஆம் ஆண்டு முதல் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருடன் மிஸ்ராவுக்கு அறிமுகம் ஏற்பட்டது. அந்தப் பெண், பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த நிருபர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.

அந்தப் பெண்ணுடன் மொபைல் வாயிலாகத் தொடர்ந்து பேசி வந்த மிஸ்ரா, ராணுவத்தின் பயிற்சி மையங்கள், ஆயுதங்கள் தொடர்பான தகவல்கள், ராணுவ செயல்பாட்டு முறைகள், எல்லைப் பாதுகாப்புப்படை முகாம்களின் புகைப்படங்கள் ஆகியவற்றை அவருடன் பகிர்ந்துள்ளார். மேலும், காஷ்மீர் விவகாரங்கள் குறித்தும் அவர்கள் பேசி வந்துள்ளனர்.

அந்தப் பெண்ணின் மொபைல் எண், பாகிஸ்தான் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரின் எண்ணை, பாகிஸ்தான் நண்பர் என்று மிஸ்ரா தன்னுடைய மொபைலில் பதிவு செய்து வைத்துள்ளார்

இதைத் தொடர்ந்து, மிஸ்ரா கைது செய்யப்பட்டு அவர் மீது மீது அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட விசாரணையில், அவர் பாகிஸ்தானுக்கு தகவல்களைக் கசிய விட்டது உறுதியாகியுள்ளது.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளிகளுடன் அவருக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து வரும் பயங்கரவாதத் தடுப்புப் படையினர், பேஸ்புக் மூலமாக இந்தியர்களை பாகிஸ்தான் உளவு அமைப்பு தூண்டில் போட்டு பிடிப்பதாகத் தெரிவித்துள்ளது.

அதாவது, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்டிருக்கும் பிஎஸ்எஃப் வீரர் பேஸ்புக்கில் பதிவு செய்த புகைப்படத்துக்கு லைக் செய்த அடையாளம் தெரியாத பெண், அவருடன் பேஸ்புக்கில் நட்பு கொண்டு, தான் ஒரு பாதுகாப்புத் துறை தொடர்பான நிருபர் என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து நட்பை வளர்த்து, ராணுவம் தொடர்பான தகவல்கள், புகைப்படங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் அந்த பெண்ணுடன் பேசி வந்த பிஎஸ்எஃப் வீரர், அந்த எண்ணை பாகிஸ்தான் தோழி என்று செல்போனில் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.