பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள பேராயர் மூலக்கல் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.
கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு பிராங்கோ முல்லக்கல் நேரில் ஆஜரானார்.
வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது. பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை நேற்று முன்தினம் அறிவித்தது.
இதற்கிடையே, தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று பிராங்கோ முல்லக்கலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் அவரை கொச்சி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், எர்னாகுளாத்தில் கைது செய்யப்பட்ட அவர், கோட்டயம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். செல்லும் வழியில் பிராங்கோ முல்லக்கல் தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, எட்டுமானூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு ஈ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.