Breaking News
ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டுள்ளார்; ராகுல் காந்தி திடுக்கிடும் குற்றச்சாட்டு

பிரான்ஸ் நாட்டின் ‘டசால்த்’ நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மோடி அரசு 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதற்கான ஒப்பந்தம் அப்போதைய பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே இந்தியா வந்தபோது மேற்கொள்ளப்பட்டது.
இதில் இந்தியாவில் ரபேல் போர் விமானங்களுக்கான உதிரிபாகங்களை தயாரிக்கும் பணிகள் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் பெரும் அளவில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே அந்நாட்டின் மீடியாபார்ட் என்னும் இணையதளத்துக்கு பேட்டி அளித்தார்.

அதில், “உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனம் தொடர்பாக எங்களுக்கு வேறு எந்த ஒரு வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமே இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது” என்று அவர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வரும் நிலையில், பிரதமர் மோடிக்கு நெருக்கமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கான பணிகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டதாக ஹாலண்டே தெரிவித்துள்ள தகவல் பெரும் பரபரப்பையும், திருப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த செய்தி வெளியான உடனேயே மோடியை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் கருத்து பதிவு செய்தார்.
அதில், “பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் மூடிய கதவுகளுக்கு பின்னால் பேச்சு வார்த்தை நடத்தி ரபேல் ஒப்பந்தத்தை மாற்றிவிட்டார். இது தொடர்பான உண்மையை வெளியிட்ட ஹாலண்டேவுக்கு நன்றி. பல லட்சம் கோடி ரூபாய் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு கிடைக்கும் விதமாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது. நாட்டு மக்களுக்கு பிரதமர் துரோகம் இழைத்துவிட்டார். அவர் நமது வீரர்களின் ரத்தத்தை அவமதித்து விட்டார்” என்று தாக்கியுள்ளார்.

The PM personally negotiated & changed the #Rafale deal behind closed doors. Thanks to François Hollande, we now know he personally delivered a deal worth billions of dollars to a bankrupt Anil Ambani.

The PM has betrayed India. He has dishonoured the blood of our soldiers.

— Rahul Gandhi (@RahulGandhi) September 21, 2018

அதேநேரம் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே என்ன சொன்னார் என்பதை சரியாக தெரிந்து கொள்ளாமல் அதுபற்றி எதையும் கூற இயலாது. வர்த்தக ரீதியான முடிவு பற்றி இந்தியாவோ, பிரான்ஸ் அரசாங்கமோ இதில் எதுவும் கூறவில்லை என்று பா.ஜனதா மறுத்துள்ளது.மேலும், ஹாலண்டே பிரெஞ்ச் மொழியில் பேட்டி அளித்து இருப்பதால் அவர் கூறிய சரியான கருத்தை ஆய்வு செய்த பிறகே இதுபற்றி சொல்ல முடியும் என்றும் பா.ஜனதா வட்டாரங்கள் கூறினர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.