Breaking News
பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: செக்குடியரசு வீராங்கனை பிளிஸ்கோவா ‘சாம்பியன்’

பான் பசிபிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்க ஓபன் சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்), முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார்.

64 நிமிடம் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 26 வயதான கரோலினா பிளிஸ்கோவா 6-4, 6-4 என்ற நேர்செட்டில் 20 வயதான நவோமி ஒசாகாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். அத்துடன் 10 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்று இருந்த ஓசாகாவின் வெற்றிப் பயணத்துக்கும் முட்டுக்கட்டை போட்டார்.

11-வது சர்வதேச பட்டத்தை வென்று இருக்கும் கரோலினா பிளிஸ்கோவா அளித்த பேட்டியில், ‘மூன்றாவது செட்டுக்கு செல்லாமல் 2 செட்டுக்குள் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி வெற்றி அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறும் போது நம்பிக்கை அதிகரிக்கும். அதுபோல் இந்த வெற்றியும் எனது நம்பிக்கையை வலுப்படுத்தி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் நான் அதிக வலுவை வெளிப்படுத்தி விளையாடவில்லை. பொறுமையாக எனது வாய்ப்புக்கு காத்து இருந்து செயல்பட்டேன்’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து நவோமி ஒசாகா கருத்து தெரிவிக்கையில், ‘ஒருபோதும் இல்லாத வகையில் அதிக சோர்வு அடைந்ததால் என்னால் சிறப்பாக விளையாட முடியாமல் போய்விட்டது. அமெரிக்க ஓபன் போட்டியில் இருந்து நான் போதிய ஓய்வு எடுக்கவில்லை. அடுத்த போட்டியில் நான் விளையாடுவது சந்தேகம் தான்’ என்றார்.

இதன் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி யில் ஜப்பானின் மியு காதே-மகோதா நினோமியா ஜோடி 6-4, 6-4 என்ற நேர்செட்டில் செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா- ஆன்ட்ரியா செஸ்டினி ஹாவாக்கோவா இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.