Breaking News
ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை : அருண்ஜெட்லி திட்டவட்டம்

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு 2016-ல் மோடி அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே உதிரி பாகங்கள் தயாரிப்பிற்கு அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனத்தை இந்திய அரசுதான் சிபாரிசு செய்தது என்று கூறினார். இதனால் இப்பிரச்சினையில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

ஹாலண்டேயின் கருத்தை மத்திய அரசும், பிரான்ஸ் அரசாங்கமும் மறுத்தன. டசால்ட் நிறுவனமும், ரிலையன்ஸ்சும் செய்துகொண்ட ஒப்பந்தம் இது. இதில் எங்களுடைய தலையீடு எதுவும் இல்லை என்று இரு நாடுகளின் அரசும் கூறின.

ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின் மூலம் ரூ.1.30 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாகவும், மோடியும், அனில் அம்பானியும் இணைந்து இந்திய ராணுவத்தின் மீது இவ்வளவு தொகையின் மீது துல்லிய தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.

இதை மறுத்து மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி நேற்று ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் இந்திய வீரர்களின் நலன்களை மோடி அரசு விட்டுக்கொடுத்து விட்டது என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருப்பது சரியல்ல. இந்த விவகாரத்தில் யார் சமரசம் செய்துகொண்டார்கள்?… ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தாமதப்படுத்தியதன் மூலம் நமது ராணுவத்தின் திறமையை குறைத்து மதிப்பிட வைத்தது.

அதேநேரம் குறைந்த விலையில் ரபேல் போர் விமானங்களை விரைவாக வாங்குவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதில் யார் செய்தது சரி?…

ஹாலண்டேயின் கருத்துக்கும், ராகுல்காந்தி கடந்த மாதம் 30-ந் தேதி வெளியிட்ட அறிக்கைக்கும் ஒரு சில விதத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுகிறது. அன்று ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில், ‘ரபேல் போர் விமான ஒப்பந்தம் ஒரு உலகளாவிய ஊழல். இது தொடர்பாக பிரான்சில் இன்னும் ஓரிரு வாரங்களில் குண்டு வெடிக்கப்போகிறது. இதில் அத்தனை பதுங்கு குழிகளும் வெடித்துச் சிதறும்’ என்று கூறி இருந்தார்.

இவர்கள் இருவரின் கருத்தில் உள்ள தொடர்பை நிரூபிப்பதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. அதே நேரம் ஹாலண்டேயிடம் இருந்து இதுபற்றிய கருத்து வெளி வந்திருப்பதால் இதில் நிச்சயம் ஏதோ மர்மம் இருக்கிறது என்று சந்தேகம் எழுகிறது. ஏனென்றால் அவர் (ராகுல்காந்தி) இதை 20 நாட்களுக்கு முன்பே கணித்து இருப்பதால் இப்படி சந்தேகம் உண்டாகிறது. அதேநேரம் இதை தற்செயலாக நடந்த ஒன்று எனவும் கூறிவிட முடியாது. இது திட்டமிட்டு வெளியிடப்பட்டது போல் தோன்றுகிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டதாக உள்ளது. இரண்டுமே ஒரே மாதிரியான பாட்டு போல் காணப்படுகிறது.

மேலும், ஹாலண்டே வெளியிட்ட முதல் அறிக்கைக்கும், 2-வதாக வெளியிட்டுள்ள அறிக்கைக்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. முதல் அறிக்கையில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய அரசுதான் சிபாரிசு செய்தது என்று கூறி இருந்தார்.

தற்போது அடுத்த அறிக்கையில், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக இந்திய அரசு அழுத்தம் கொடுத்ததா? என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள நிறுவனங்கள்தான் தங்களுடைய பங்குதாரரை தேர்ந்தெடுக்கின்றன. எனவே இதுபற்றி டசால்ட் நிறுவனம்தான் கருத்துச் சொல்ல முடியும் என்று தெரிவித்து இருக்கிறார்.

கடந்த மாதம் 31-ந் தேதி காங்கிரஸ் தலைவர் ஒருவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘டசால்ட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை பெறுவதற்காக ஹாலண்டேயின் பெண் தோழி- ஹாலிவுட் நடிகையின்(ஜூலி ஹயத்) மூலம் அவருக்கு(ஹாலண்டே) அனில் அம்பானி லஞ்சம் கொடுத்தற்கான ஆதாரம் உள்ளது என்று தெரிவித்து இருந்தார்.

அப்படியென்றால் காங்கிரஸ் கட்சி பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே இந்திய தொழில் அதிபரிடம் இருந்து லஞ்சம் பெற்றார் என்றுதானே குற்றம்சாட்டுகிறது… பிறகு அவரையே தற்போது முக்கிய சாட்சியாக காங்கிரஸ் கூறுகிறது. அதிபர் பதவியில் இருந்த காலத்தில் தனது நாட்டு நலனில் சரிவர செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஹாலண்டே எதிர்கொண்டுள்ள நிலையில் அவரை காங்கிரஸ் முக்கிய சாட்சியாக காண்பிப்பது வேடிக்கை.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால், ரபேல் போர் விமான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அருண்ஜெட்லி, “ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஏனென்றால் நமது பாதுகாப்பு படைக்கு வலிமை சேர்க்க நவீன போர் விமானங்கள் தேவை. எனவே அந்த விமானங்கள் நமக்கு வரும். வந்து சேரவேண்டிய நேரத்தில் அவை நமக்கு வந்து விடும்” என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.