Breaking News
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் திடீர் அதிர்ஷ்டம்: 200 ஆட்டங்களில் கேப்டனாக இருந்து டோனி சாதனை

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் ஷிகர் தவான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து திடீர் அதிர்ஷ்டமாக விக்கெட் கீப்பர் டோனியின் வசம் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக 10 ஆண்டுகள் வலம் வந்த டோனி, அதன் பிறகு நெருக்கடி காரணமாக பதவியை விட்டு விலகினார்.

இந்த நிலையில் ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு முறை அவரை கேப்டன் பதவி அலங்கரித்து இருக்கிறது. அவர் கேப்டனாக பணியாற்றிய 200–வது ஆட்டம் இதுவாகும். 37 வயதான டோனி கூறுகையில், ‘நான் ஏற்கனவே 199 ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளேன். இப்போது 200–வது ஆட்டத்திற்கு கேப்டனாக இருக்கும் வாய்ப்பு இந்த ஆட்டத்தின் மூலம் கிடைத்துள்ளது. எல்லாமே தலைவிதியின்படி தான் இருக்கிறது. அதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. 200 ஆட்டங்களுக்கு கேப்டன் பதவியை நிறைவு செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இதை பெரிய வி‌ஷயமாக நான் கருதவில்லை.’ என்றார்.

அதிக ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்த சாதனையாளர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (230 ஆட்டம்), நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங் (218) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் டோனி இருக்கிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.