இந்தோனேசியாவில் நிலநடுக்கம்-சுனாமி; பலி எண்ணிக்கை 1,200-ஐ தாண்டியது
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தை (ரிக்டரில் 7.5) தொடர்ந்து சுனாமி தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,200-ஐ தாண்டி உள்ளது. குடிநீர், உணவுப்பொருட்களுக்கு தட்டுப் பாடு நிலவுவதால் மக்கள் கடை களை சூறையாடி வருகின்றனர்.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவு பகுதியில் கடந்த 28-ம் தேதி மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமியும் தாக்கியது. இதனால் பலு நகரில் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். ராணுவமும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,200-ஐ தாண்டி உள்ளது. காயமடைந்தவர்கள் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
இதனிடையே, குடிநீர், உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக, 46 ஆயிரம் குழந்தைகள் உட்பட மொத்தம் 1.91 லட்சம் பேர் அத்தியாவசிய பொருட்களின்றி தவிப்பதாக ஐ.நா.வின் மனிதாபிமான நல ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால், மூடப் பட்டுள்ள கடைகளை பொதுமக்கள் சூறையாடி வருவதாகவும் அவர் கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் போலீஸார் தெரிவித் துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி அரி டோனோ சுக்மந்தோ கூறும்போது, “நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு பொதுமக்கள் கடையை உடைத்து குடிநீர், உணவுப் பொருள், பணம் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். அவர்களது தேவையைக் கருதி முதல் 2 நாட் களில் சகித்துக் கொண்டோம். இப்போது, போதுமான அத்தியா வசியப் பொருட்கள் வரவழைக் கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. ஆனாலும், சிலர் கடைகளை சூறையாடி வருகின்றனர். இது தொடர்பாக 35 பேரை கைது செய்துள்ளோம். இதுபோன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.