Breaking News
தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு

மேல்மருவத்தூர் மற்றும் தாம்பரம் அருகே உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்குச் சொந்தமான 2 பண்ணை வீடுகளில் நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். இச்சோதனையில் 2 பண்ணை வீடு களில் இருந்தும் 132 பழமையான கற்சிலைகளை போலீஸார் மீட்டனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங் களில் கோயில் சிலைகள் திருடப்பட்டு, உள் நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் கடத்தப்பட்டுள்ளது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சைதாப் பேட்டையில் ரன்வீர்ஷா என்பவருக்கு சொந்தமான வீட்டில் சில சிலைகள் இருப்ப தாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கடந்த 27-ம் தேதி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை செய்து ரன்வீர்ஷாவின் சைதாப்பேட்டை வீட்டில் இருந்து 12 ஐம்பொன் சிலைகள் உட்பட 89 சிலைகளை பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த 30-ம் தேதி தஞ்சாவூர் அருகே திருவையாறில் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான அரண் மனையில் சிலை கடத்தல் பிரிவு போலீஸார் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்குப் பிறகு போலீஸார் ‘‘இந்த அரண்மனையில் ஏதேனும் சிலைகள், மூலிகை ஓவியங்கள் இருக்கலாம். நீதி மன்ற அனுமதி பெற்று இங்கு முழுமை யான ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும்’’ என்று அறிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக மேல்மருவத்தூர் அடுத்த மோகல்வாடியில் உள்ள ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சோதனை நடத்த போலீஸார் முடிவு செய்தனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமை யில் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று இந்த பண்ணை வீட்டுக்கு வந்து சோதனை நடத்தினர். இந்த வீடு 50 ஏக்கர் கொண்ட பண்ணைக்கு நடுவே அமைந்துள்ளது. அதில் பூட்டப்பட்டிருந்த இரு அறைகளின் பூட்டை உடைத்து போலீஸார் சோதனை செய்ததில் முருகன், பெருமாள், அம்மன், நந்தி போன்ற கற்சிலைகளும், கலை நயம் மிக்க அலங்கார சிலைகள், கற்தூண்கள் ஆகியவையும் இருந்தன.

இந்த வீட்டை முழுமையாகச் சோதனை செய்த போலீஸார் பழமையான சிலைகள் என்று கருதப்பட்ட 89 சிலைகளைக் கைப் பற்றினர். இதனை 2 லாரிகள் மூலம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு எடுத்துச் சென்றனர். இந்தச் சிலைகள் எவ்வளவு ஆண்டுகள் பழமையானது? எந்தக் கோயிலுக்குச் சொந்தமானது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஐ.ஜி. பொன்.மாணிக்க வேல் நிருபர்களிடம் கூறியதாவது: இது வரை இந்த இடத்தில் இருந்து 89 கற் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோல பல்வேறு இடங்களில் சிலைகள் பதுக்கி வைத்திருப்பது எங்கள் விசாரணையில் தெரிய வருகிறது. சிலை வைத்து இருப்பவர்கள் 15 நாட்களுக்குள் தாமாக முன்வந்து அரசிடம் ஒப்படைத்தால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. மீறினால் சிலையை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

ஒரு சில வீடுகளில் பழமையான உலோக சிலைகளை வைத்துள்ளனர். அவர்கள் தெரியாமல் யாரிடமாவது வாங்கி வைத்திருக்கலாம். அவை எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்ற குறிப்புகளை மட்டும் ஆவணமாக ஏற்றுக் கொள்ள முடியாது. உரிய ஆவணங்கள் இல்லாமல் பழங்கால சிலைகள் இருந் தால் அந்தச் சிலைகளையும் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு இடத்தில் ஆய்வு

இதையடுத்து, தாம்பரம் அருகே குழங்கல்சேரியில் 100 ஏக்கர் பரப்பளவில் ’ஷா ஆர்கானிக்’ என்ற பெயரில் அமைந்துள்ள ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. இதன் அடிப்படையில் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் அங்கு நேற்று ஆய்வு நடத்தினர். இதில், கல் தூண்கள் உள்ளிட்ட 43 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து லாரி மூலம் அனைத்தும் கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து சிலை தடுப்பு பிரிவு டிஎஸ்பி சுந்தரம் கூறும்போது, ‘‘தற்போது இங்கு 43 கற்சிலைகள் மற்றும் சிற்பங் களை பறிமுதல் செய்துள்ளோம். இது குறித்து ரன்வீர்ஷாவுக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்கப்படும். விளக்கம் கிடைத்த பின்பு அவர் மீது குற்ற நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும், கைப்பற்றப்பட்ட இந்த பழமையான கற்சிலைகள் கோயில்களில் கொள்ளையடிக்கப்பட்டதாக இருக்கலாம் எனக் கருதுகிறோம்’’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.