பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சகோதரர் கைது
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் (வயது 67). இவர் தற்போது அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.
நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்த போது வீட்டு வசதி திட்டத்தில் விதிமுறைகளை மீறி ஷாபாஸ் ஷெரீப் தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
அவரின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லாததால் ஊழல் வழக்கில் ஷாபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய ஷாபாஸ் ஷெரீப்பின் மருமகன் அலி இம்ரான் யூசுப் இங்கிலாந்துக்கு தப்பி சென்று விட்டார். மேலும் இதே வழக்கில் ஷாபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சாவிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஆதாரத்தின் அடிப்படையில் ஷாபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டதாகவும், இதில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு தலையிடாது என்றும் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.