‘சபரிமலை வழிபாடு தொடர்பாக ஐயப்ப பக்தர்களே முறையிட முடியும்’- உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு
உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் சங்கம் மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், சபரிமலை சம்பிரதாய விஷயங்கள், சபரிமலை வழிபாட்டுக்கு முறை தொடர்பாக ஐயப்ப பக்தர்களே முறையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘‘பெண்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. எனவே சபரிமலை கோயிலுக்கு செல்லும் உரிமை அனைத்து வயது பெண்களுக்கும் உள்ளது’’ என தீர்ப்பளித்தது.
தீர்ப்புக்கு, ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத்தின் தலைவர் ஷைலஜா விஜயன் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் கூறியுள்ளதாவது:
ஐயப்ப பக்தர்கள் யாரும் வழிபாட்டு முறையில் பாலின பாகுபாடு இருப்பதாகக் குற்றம் சாட்டவில்லை. இந்த வழக்கங்கள் பிரம்மச்சாரியான ஐயப்பனின் தனித்த குணநலன்களை அடிப்படையாகக் கொண்டு பின்பற்றப்படுகின்றன. இந்த முறைமையில் எப்படி கோயிலின் பக்தர்கள் என்று உரிமை கோராதவர்கள் தடை பெற முடியும்?
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 32-ன் கீழ் மத ரீதியான விவகாரங்கள் குறித்த மனுக்களை சக பக்தர்களால் மட்டுமே தொடுக்க முடியும். சபரிமலை விவகாரத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அடிப்படை உரிமைகள் எப்படி பாதிக்கப்பட்டது?
இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் மத ரீதியான விஷயங்களில் பிரிவு 32-ன் கீழ் மனு தாக்கல் செய்ததை உச்ச நீதிமன்றம் எப்படி ஏற்றுக்கொண்டது? சபரிமலை பக்தர்கள் என்று கூறாதவர்கள் எப்படி இந்த வழக்கைத் தொடுக்க முடியும்?” என்று சீராய்வு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் அமர்வில் இருந்த ஒரே ஒரு பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் மாறுபட்ட தீர்ப்பை எதிரொலிக்கிறது. தீர்ப்பின்போது அவர், ”மதரீதியான பழக்கங்களுடன் பெண்களுக்கான சம உரிமையை தொடர்பு படுத்த முடியாது. மதரீதியான பழக்கங்களை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது; வழிபாடு நடத்துவோர்தான் முடிவு செய்ய வேண்டும்.
மதநம்பிக்கையுடன் பகுத்தறிவு, மாறும் சூழல் போன்றவற்றை ஒப்பிட முடியாது. ஒவ்வொரு சமூகமும் பின்பற்றி வரும் மத நம்பிக்கையை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது.
இந்தியா பல்வேறு மக்கள் வாழும் நாடு. அவர்களது நம்பிக்கையை பின்பற்ற அரசியல் சட்டம் அவர்களுக்கு உரிமை வழங்கியுள்ளது. ஒருவரது நம்பிக்கையால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு சமூகத்தில் பெரும் தீங்கு நிலவினால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்.
தற்போதைய தீர்ப்பு என்பது சபரிமலையுடன் நிறுத்திக் கொள்ள முடியாது. இது மேலும் விரிவடையும். மிக ஆழ்ந்த மத நம்பிக்கையை இதுபோன்று சர்வசாதாரணமாக புறந்தள்ள முடியாது. மத நம்பிக்கை பெண்ணுரிமையுடன் ஒப்பிட முடியாது. இது முழுக்க முழுக்க வழிபாட்டு உரிமை. அதனை அவர்களே முடிவு செய்ய இயலும். நீதிமன்றம் இதில் தலையிட எந்த வாய்ப்பும் இல்லை” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.