Breaking News
ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

ப.சிதம்பரம், மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. சோதனையையும் மேற்கொண்டது. மத்திய அமலாக்கத்துறையும் இதுபற்றி விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் 19-ந்தேதி சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருடைய பெயர்களும் இடம் பெற்று இருந்தன. இதனால் இருவரும் தங்களை கைது செய்யாமல் இருக்க சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்ய பலமுறை சி.பி.ஐ. கோர்ட்டு தடை விதித்தது.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று டெல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல்கள் இந்த விவகாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தங்களுக்கு அவகாசம் தேவை என்று தெரிவித்தனர்.

இதனால் வழக்கு விசாரணையை வருகிற 1-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி ஓ.பி.ஷைனி ப.சிதம்பரத்தையும், கார்த்தி சிதம்பரத்தையும் சி.பி.ஐ. கைது செய்வதற்கு விதித்திருந்த தடையை அன்றுவரை நீட்டித்தும் உத்தரவு பிறப்பித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.