Breaking News
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை மு.க.ஸ்டாலின் ஆவேசம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொதுநலனில் கொண்டுள்ள அக்கறையினால் பல்வேறு பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து வெளிப்படுத்துவதில் தணியாத ஆர்வமுடன் செயலாற்றிவரும் மூத்த பத்திரிகையாளரும், நக்கீரன் இதழின் ஆசிரியருமான நக்கீரன் கோபாலை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான ‘தொடர்’ ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியரை, சர்வாதிகார பாசிச மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது, கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தின் கழுத்தில் ஏறி அமர்ந்து சவாரி செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசும், தமிழக கவர்னரும் எண்ணுவது, தமிழ்நாட்டில் நடப்பது பா.ஜ.க. ஆட்சியே என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அ.தி.மு.க. ஆட்சியின் அனைத்து வகை ஊழல்களுக்கும், சட்டத்திற்கு புறம்பாக முட்டுக்கொடுத்து காப்பாற்றிக்கொண்டிருக்கும் மத்திய அரசும், மாநிலத்தில் உள்ள கவர்னரும் ‘பொம்மை’ அரசை பயன்படுத்தி, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வேலையில் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது.

கவர்னர் கொடுத்த புகாரின் பேரில், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தையே கொச்சைப்படுத்தி பேசிய எச்.ராஜாவை கைது செய்யவில்லை. போலீஸ் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்ற நேரத்தில் கவர்னரே அவரை சந்தித்துப்பேசுகிறார். இன்னொரு பக்கம் ‘பாசிச பா.ஜ.க’ என்றதால் மாணவி சோபியா கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை பற்றி, தொடர் எழுதினால் நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கைது செய்யப்படுகிறார்.

என்னதான் நடக்கிறது தமிழகத்தில்? தமிழ்நாடு என்ன ஜனநாயக மாநிலமா? என்றே கேட்கத் தோன்றுகிறது. அ.தி.மு.க. அரசும், பாசிச பா.ஜ.க. அரசின் முகவராக இருக்கும் கவர்னரும் தமிழ்நாட்டில் ஒரு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை அமல்படுத்தி, பத்திரிகை சுதந்திரத்திற்கு பகிரங்கமான அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்.

பொம்மை அரசை வைத்துக்கொண்டு தங்கள் சித்தாந்தங்களுக்கு வேண்டாதவர்களை கைது செய்யத்தூண்டும் மத்திய அரசும், கவர்னரும் இந்த அரசை கலைத்துவிட்டு நேரடியாகவே பா.ஜ.க. வழிகாட்டுதலில் மாநில அரசை நடத்தலாம். அதை விடுத்து விட்டு, கொல்லைப்புற வழியாக முகமூடி அணிந்துகொண்டு தங்கள் கட்டளைகளை நிறைவேற்ற எடுபிடி அரசைப் பயன்படுத்துவது வெட்கக்கேடானது. பொறுப்பான மாநில கவர்னர் பதவியில் இருப்பவர் மறைமுகமாக அரசியல் செய்ய நினைக்கும் போது, விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் பக்குவத்தை பெறவேண்டும்.

அப்படி பொறுத்துக்கொள்ள இயலாமல், முதல்-அமைச்சரை ராஜ்பவனுக்கே அழைத்து, நக்கீரன் கோபாலை கைது செய்யச் சொல்லியிருப்பது ஒரு மாநில கவர்னருக்கு அதுவும் அரசியல் சட்டப்பதவியை வகிப்பவருக்கு அழகா? ஆகவே, கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். மேலும் அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கினை நிபந்தனையின்றி திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நக்கீரன் கோபாலை சந்தித்த பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைக்கு நக்கீரன் கோபால் மீது பாய்ந்திருக்கின்ற இந்த சட்டம், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா மீது ஏன் பாயவில்லை? அறநிலையத்துறையில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுடைய குடும்பங்களை கேவலமான முறையில் கொச்சைப்படுத்தினார். பெரியார் சிலையை முழுமையாக உடைக்க வேண்டும் என்று பகிரங்கமாக பேசினார். ஆனாலும் அவர் கைது செய்யப்படவில்லை.

பா.ஜ.க.வை சேர்ந்த எஸ்.வி.சேகர் வெளிப்படையாகவே பத்திரிகை துறையில் இருக்கும் பெண்களை மிக கேவலமாக கொச்சைப்படுத்தி பேசியதை இந்த நாடு மறந்துவிடவில்லை. ஆனாலும் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை. நீதிமன்றமே அவரை கைது செய்ய உத்தரவிட்டும், அவர் கைது செய்யப்படாமல் காவல்துறை உதவியோடு வலம் வந்த காட்சியெல்லாம் நாட்டிலே நடந்திருக்கிறது. பா.ஜ.க.வுக்கு ஒரு நீதி, பா.ஜ.க.வை எதிர்க்கக்கூடிய கட்சிகளுக்கு அல்லது பத்திரிகையாளர்களுக்கு ஒரு நீதி. இதை தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.