Breaking News
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: வலுவான தொடக்கம் கண்டு நிலைகுலைந்த ஆஸ்திரேலியா

பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முகமது ஹபீஸ் (126 ரன்), ஹாரிஸ் சோகைல் (110 ரன்) ஆகியோரின் சதங்களின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பிஞ்சும், உஸ்மான் கவாஜாவும் நிலைத்து நின்று விளையாடி வலுவான தொடக்கம் அமைத்து தந்தனர். உணவு இடைவேளை வரை இவர்களை அசைக்க முடியவில்லை.

அணியின் ஸ்கோர் 142 ரன்களாக உயர்ந்த போது ஆரோன் பிஞ்ச் 62 ரன்களில் (161 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாசின் பந்து வீச்சில் அருகில் நின்ற ஆசாத் ஷபிக்கிடம் கேட்ச் ஆனார். இதன் பிறகு புதுமுக சுழற்பந்து வீச்சாளர் பிலால் ஆசிப்பின் சுழலில் சிக்கி, ஆஸ்திரேலியா நிலைகுலைந்தது. கவாஜா 85 ரன்னில் (175 பந்து, 8 பவுண்டரி) வெளியேற்றப்பட்டார்.

அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் கொத்து கொத்தாக சரிந்தன. ஷான் மார்ஷ் (7 ரன்), கேப்டன் டிம் பெய்ன் (7 ரன்), அறிமுக வீரர் டிராவிஸ் ஹெட் (0) உள்பட 6 வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 83.3 ஓவர்களில் 202 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. அதாவது கடைசி 60 ரன்களுக்கு அந்த அணி 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. 33 வயதான பிலால் ஆசிப் 21.3 ஓவர்களில் 7 மெய்டனுடன் 36 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். முகமது அப்பாஸ் 4 விக்கெட் சாய்த்தார்.

அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு பாலோ-ஆன் வழங்காமல் 280 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. இமாம் உல்-ஹக் 23 ரன்களுடன் களத்தில் உள்ளார். இதுவரை மொத்தம் 325 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள பாகிஸ்தான் அணி இந்த டெஸ்டில் வெற்றி பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. இன்று 4-வதுநாள் ஆட்டம் நடைபெறும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.