Breaking News
2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு மனு: வழக்கு ஆவணங்களை 2 வாரங்களுக்குள் வழங்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு தொடர்பான ஆவணங்களை அனைத்து தரப்பினருக்கும் 2 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் சில நிறுவனங்களின் நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தன.

சுவான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியதாக கூறப்பட்டது குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த வழக்குகளில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக கூறி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து கடந்த டிசம்பர் 21-ந் தேதி தீர்ப்பு கூறினார். இந்த தீர்ப்புக்கு எதிராக அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. டெல்லி ஐகோர்ட்டில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளன.

சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை நேற்று ஐகோர்ட்டில் நீதிபதி நஜ்மி வாஜ்ரி முன்னிலையான அமர்வு முன்பு வந்தது. விசாரணை தொடங்கியதும் நீதிபதி, கடந்த விசாரணையின்போது அனைவருக்கும் சி.டி. வடிவில் ஆவணங்களை அளிக்குமாறு கூறியிருந்தோம். அனைவரும் பதில் மனு தாக்கல் செய்தீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பெரும்பாலான எதிர்மனுதாரர்கள் பதில்களை இன்னும் தாக்கல் செய்யவில்லை என்றார்.

ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட எதிர்பதில் மனுதாரர்கள் தரப்பில், “நாங்கள் கோரிய ஆவணங்கள் எதுவும் எங்களுக்கு இதுவரை அளிக்கப்படவில்லை. அதனால் விரிவான பதில் மனுவை எங்களால் தாக்கல் செய்ய முடியவில்லை. இருந்தாலும் பூர்வாங்க பதில்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எங்களுக்கு சி.பி.ஐ. தரப்பில் அளிக்கப்பட்ட குறுந்தகட்டில் சி.பி.ஐ.யின் மனு மட்டுமே உள்ளது. மற்ற ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று வாதாடப்பட்டது.

இதற்கு சி.பி.ஐ. தரப்பில், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் கோர்ட்டு பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்மனுதாரர்களுக்கு ஆவணங்கள் வழங்கும்போது எங்களுக்கும் அதன் ஒரு பிரதியை பதிவாளர் அலுவலகம் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை 2 வாரங்களுக்குள் பதிவாளர் அலுவலகம் அனைத்து தரப்பினருக்கும் குறுந்தகடு வடிவில் வழங்க வேண்டும். ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் தரப்பு 6 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு பிறகு 4 வாரங்களுக்குள் சி.பி.ஐ. தரப்பு எதிர்பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.