Breaking News
ரபேல் விவகாரத்தில், மோடி மீது விசாரணை நடத்த வேண்டும் ராகுல் காந்தி வலியுறுத்தல்

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை, இந்திய கூட்டாளி நிறுவனமாக டசால்ட் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதாக போர்க்கொடி தூக்கியுள்ள காங்கிரஸ் கட்சி, ரிலையன்ஸ் நிறுவனத்தை கூட்டாளியாக சேர்த்ததிலும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரசாரின் இந்த குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் விதமாக கடந்த மாதம் பிரான்ஸ் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே, ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய கூட்டாளி நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனத்தை சேர்ப்பதை தவிர வேறு எந்த வாய்ப்பையும் இந்தியா எங்களுக்கு வழங்கவில்லை எனக்கூறினார்.

ஆனால் இந்த ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனவும், ரிலையன்ஸ் நிறுவனத்தை டசால்ட் நிறுவனம் தேர்வு செய்ததில் தங்களின் தலையீடு இல்லை என்றும் மத்திய அரசு கூறியது.

இந்த நிலையில், ‘ரபேல் ஒப்பந்தத்தை பெற வேண்டுமென்றால் ரிலையன்ஸ் நிறுவனத்தை சேர்த்துக்கொள்வது கட்டாயமும், அவசியமும் ஆகும்’ என டசால்ட் நிறுவனத்தின் துணை தலைமை செயல் அதிகாரி லோய்க் சிகாலன் சக ஊழியர்களிடம் கூறியதாக, பிரெஞ்சு புலனாய்வு செய்தி இணையதளமான ‘மீடியாபார்ட்’ செய்தி வெளியிட்டு உள்ளது.

இது மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதுடன், ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக கூறும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு ஆதாரம் சேர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது. இதைப்போல ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனின் பிரான்ஸ் பயணமும் எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அவசரமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘அனில் அம்பானிக்கு இழப்பீடாக ரூ.30 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்’ என்ற பிரதமரின் முன் நிபந்தனையின் பேரில்தான் ரபேல் ஒப்பந்தம் நிறைவேறியதாக ரபேல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது குறித்து பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறிய கருத்துகளை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

எனவே இந்த ஒப்பந்தம் மூலம் அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடி கிடைத்திருக்கிறது. இதிலிருந்து, பிரதமர் மோடி அனில் அம்பானியின் காவலாளி என்பது தெரிகிறது. ஊழலை ஒழிப்பேன் என்று கூறி கடந்த 2014-ல் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடியே தற்போது ஊழல் செய்திருப்பது இதன்மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

ரபேல் குறித்து வரும் தகவல்கள் அனைத்தும், இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளன. பிரதமர் மோடி ஒரு ஊழல் மனிதர் என்பதை நாட்டு இளைஞர்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் ஊழல் செய்திருக்கிறார். அது குறித்தும் விசாரிக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் குறித்து கூறப்படும் குற்றச்சாட்டுகளை பிரதமர் நிச்சயம் தெளிவாக்க வேண்டும், அல்லது பதவி விலக வேண்டும்.

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் திடீரென பிரான்ஸ் நாட்டுக்கு சென்றிருப்பது, பிரதமர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகிறது. ரபேல் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் சென்றிருப்பது தெளிவாகிறது. இந்த விவகாரத்தை மூடி மறைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதைத்தவிர அவர் தற்போது பிரான்ஸ் செல்வதற்கு என்ன அவசரம் இருக்கிறது?

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.