Breaking News
“முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறும்” – பிரதமர் மோடி நம்பிக்கை

தேசிய மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி, டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

எங்கள் அரசு, ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இதன் வெற்றியால், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
‘வாழ்க்கை’ என்பதன் அர்த்தம், வாழ்வது மட்டுமல்ல, கவுரவத்துடன் வாழ்வது ஆகும்.

அந்த வகையில், சட்டங்கள் மூலமாக மக்களின் உரிமைகளை உறுதி செய்துள்ளோம். ‘முத்தலாக்’ மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறிவிட்டது. மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. அங்கும் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

தாய்மார்களுக்கு பேறுகால விடுப்பை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தி உள்ளோம். இதன் மூலம், புதிதாக பிறந்த குழந்தையின் உரிமைகளையும் பாதுகாத்துள்ளோம். அதாவது, அக்குழந்தை, தனது தாயுடன் 6 மாதங்கள் உடன் இருக்கும் உரிமையை பெறுகிறது. இது ஒரு பெரிய நடவடிக்கை. எத்தனையோ முன்னேறிய நாடுகளில் கூட இந்த சலுகை அளிக்கப்படவில்லை.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு கட்டிடங்கள், விமான, ரெயில் நிலையங்களில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்ட இரண்டரை வாரத்தில் 50 ஆயிரம் பேர், அத்திட்டத்தால் பலன் அடைந்துள்ளனர்.

எய்ட்ஸ் நோய் பாதித்தவர்கள், பாரபட்சமின்றி சமமாக நடத்தப்படுவதை சட்டம் மூலமாக உறுதி செய்துள்ளோம். ஆதார் திட்டம், தொழில்நுட்பம் அடிப்படையிலான அதிகாரமளித்தல் நடவடிக்கை ஆகும்.

இவ்வாறு மோடி பேசினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.