‘தித்லி’ புயல்: ஒடிசாவில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு
வங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கில் 270 கிலோ மீட்டர் தூரத்திலும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென் கிழக்கில் 320 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலை கொண்டது.
அந்த புயல் கலிங்கப்பட்டினத்திற்கும், கோபால்பூருக்கும் இடையே கடந்த 11-ம் தேதி (வியாழக்கிழமை) காலை கரையை கடந்தது. பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. புயல் காரணமாக ஓடிசாவில் தொடர்ந்து கனமழை பெய்தது. 18 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
‘தித்லி’ புயலால் பெய்த கனமழையால் கஞ்சம், கஜபதி, ராயகடா, பூரி, கந்தமால், கேந்திரபாரா மற்றும் பாலாசோர் மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த மாவட்டங்களில் ஓடும் பிரதான ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவை தாண்டி செல்கிறது.
இந்த புயல் மற்றும் கனமழையால் மாநிலத்தில் சுமார் 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இதில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை சேர்ந்த சுமார் 1¼ லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில், கஜபதி மாவட்டத்தின் பரகரா கிராமத்தை சேர்ந்த சிலர் பாதுகாப்புக்காக அருகில் உள்ள குகை போன்ற ஒரு பகுதிக்குள் சென்று தங்கியிருந்தனர். அப்போது திடீரென அப்பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் அந்த குகைப்பகுதி முழுவதையும் மண் மூடியது. அதில் தங்கியிருந்த மக்கள் அனைவரும் உயிரோடு புதைந்தனர். இந்த கோர சம்பவத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். மேலும் 4 பேரை காணவில்லை. அவர்கள் அனைவரும் குகையின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என கூறப்பட்டது.
இந்தநிலையில், மண்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து ஞயாயிற்றுக்கிழமையன்று 2 உடல்கள் வெளியே எடுக்கப்பட்டதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வானிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு மக்கள் வீடு திரும்பிய நிலையில், நிவாரண முகாம்களில் இனி உணவு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜபதி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
தித்லி புயலால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட கஜபதி மாவட்டத்தில் மின்சாரம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. தித்லி புயலால் பாதிக்கப்பட்ட பயிர்சேதங்களுக்கு மதிப்பீடு செய்து விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்று உயர் அதிகாரி தெரிவித்தார்.