Breaking News
‘மீ டூ’வை தொடர்ந்து பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் ‘வீ டூ’ இயக்கம் தொடக்கம்

திரைப்பட பின்னணி பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது கூறிய பாலியல் புகாரை தொடர்ந்து கடந்த சில நாட்களாக ‘மீ டூ’ என்ற ஹேஸ்டேக் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆண்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த ஹேஸ்டேக்கில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்தநிலையில் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் ‘வீ டூ மென்’ என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளனர்.
இந்த இயக்கம் குறித்து திரைப்பட இயக்குனரும், பத்திரிகையாளருமான வாராகி கூறியதாவது:-

பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக இந்த இயக்கத்தை தொடங்கி உள்ளோம். இந்த இயக்கத்தில் நடிகர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். விருப்பத்தின் பேரில் ஆண்களுடன் சேர்ந்து பழகும் பெண்கள் மனக்கசப்பு ஏற்பட்டதும் பாலியல் புகாரை கையில் எடுக்கின்றனர். பணம் பறிக்கும் நோக்கத்தில் சில பெண்கள் செயல்படுகின்றனர்.

இதுபோன்ற புகார்களை அனுமதித்தால் ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். எனவே, இதுபோன்ற புகார்களை ஏற்பது தொடர்பாக உரிய வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை அணுக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் வக்கீல் அருள்துமிலன், பொதுச்செயலாளர் வக்கீல் மதுசூதனன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘மீ டூ’ இயக்கம் சார்பில் கொடுக்கப்படும் புகார்களின் உண்மை தன்மை குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை செய்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு குற்றம் சுமத்தப்பட்டவரின் புகைப்படம், பெயர், முகவரியை இணையதளம், பத்திரிகை, ஊடகம் போன்றவற்றில் வெளியிட உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

கவிஞர் வைரமுத்து மீது புகார் கூறும் பாடகி சின்மயி கடந்த 2013-ம் ஆண்டு முகநூல் பக்கத்தில் தன்னை தொந்தரவு செய்ததாக கூறி பேராசிரியர், அரசு ஊழியர் மற்றும் சில நபர்கள் மீது புகார் கொடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அந்த வழக்கை விரைந்து நடத்தாமல் கிடப்பில் போட்டதன் மர்மம் என்ன?.

இன்று கவிஞர் வைரமுத்து மீது புகார் தெரிவித்துள்ள சின்மயி அன்றே ஏன் தெரிவிக்கவில்லை? விளம்பரத்துக்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோதான், இந்த புகாரை அவர் தெரிவித்துள்ளார் என்றும் சந்தேகிக்க தோன்றுகிறது.

எனவே நேர்மையான ஆண்கள், திறமைமிக்க ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் அச்சுறுத்தல்களை புகார் அளித்து தீர்வுகாண ஆண்களுக்கு தேசிய ஆண்கள் ஆணையம் அமைத்து அதன்மூலம் ஆண்கள் சந்திக்கும் சமூக பிரச்சினைகளை முறையிட வழிவகை செய்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.