Breaking News
கமல்ஹாசனின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டும்-ராஜேந்திர பாலாஜி; ராஜேந்திரபாலாஜி ஒரு தீய சக்தி-கமல்ஹாசன்

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நடிகர் கமல்ஹாசனின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. கட்சி வளர்ந்தால் தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் பெரும் ஆபத்து. கமல் வெளிநாட்டு தீய சக்திகளுடன் பயணிக்கிறாரோ என்ற சந்தேகம் உள்ளது. ரஜினி ஆன்மீகத்தை சார்ந்தவர். நல்ல மனிதர். எம்.ஜி.ஆர். மக்களோடு இருந்து மாளிகையை பார்த்தவர்.

கமல் மாளிகையில் இருந்து கொண்டு மக்களை பார்க்கிறார். தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் போல கமல் நாடகம் ஆடுகிறார். அது தேர்தலுக்கு ஒத்துவராது. கமல் கட்சி கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. தேர்தல் வந்தால் அ.தி.மு.க.வும், தி.மு.க.வுதான் நிற்கும். மற்ற கட்சிகள் இல்லாமல் போய் விடும். அ.தி.மு.க.வுக்கு எதிரி தி.மு.க. தான். தனக்கு வந்த சிறிய பிரச்சனையை கூட தாங்க முடியாமல் வெளிநாட்டுக்கு செல்வேன் என்று கூறிய கமலால் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியாது.

திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். திருப்பரங்குன்றம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் தொண்டர்கள் எங்களிடம் வலுவாக உள்ளனர்.

பால்வளத்தில் தமிழக வரலாற்றில் மிகப்பெரிய புரட்சி நடந்துள்ளது. கொள்முதல் விற்பனையில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளோம். எடப்பாடி பழனிசாமி, பால்வளத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் புகார் கூறி விட்டால் அ.தி.மு.க.வை அழித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. அவர் பதவி விலக வேண்டியது இல்லை. அவர் மீது தவறு இல்லாததால் பயப்படாமல் உள்ளார். அவர் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். காலையில் 3 இட்லி, இரவில் கஞ்சி குடித்து எளிமையாக வாழ்ந்து வருகிறார்.

மக்களின் கஷ்டங்களை அறிந்த முதல்வராக அவர் உள்ளார். சபரிமலை விவகாரத்தில் மக்கள் வழிபாட்டு முறையில் யாரும் தலையிடக்கூடாது. காலம், காலமாக உள்ள நடைமுறையை மாற்றுவதால் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்பது எனது கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கூறியதாவது:-

நான் மக்களை நோக்கி செல்கிறேன், கட்சிகளை நோக்கி செல்லவில்லை, மக்களிடம் வரவேற்பு இருப்பதாக நம்புகிறேன். காங்கிரசுடன் கூட்டணி என்று நான் சொல்லவில்லை, கூட்டணி குறித்து தற்போது எதுவும் பேச முடியாது.
பாஜகவின் கொல்லைப்புறமாக தமிழகம் மாறிவிட கூடாது.

நான் கட்சிகளை நோக்கி செல்லவில்லை, மக்களை நோக்கி செல்கிறேன். பெண்கள் அதிகாரத்துக்கு வந்து நீண்ட நாட்களாகிவிட்டது. பெண்கள் பதற்றமான சூழ்நிலையில் இருக்கிறார்கள், காந்தியின் கனவு இன்னும் நிறைவேறவில்லை.

கமல்ஹாசனின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. கட்சி வளர்ந்தால் தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் பெரும் ஆபத்து என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறி உள்ளாரே என நிருபர்கள் கேட்டதற்கு கரு கலைக்கப்பட வேண்டும் என கூறி உள்ளார். அது பெண்களுக்கு பிடிக்காது. ராஜேந்திர பாலாஜி ஒரு தீய சக்தி என கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.