முதியவரிடம் விலாசம் கேட்பது போல் நடித்து செல்ஃபோன் பறிப்பு
சென்னை வளசரவாக்கத்தில் முகவரி கேட்பது போல் நடித்து மர்ம நபர்கள் செல்ஃபோனை பறித்துச் சென்ற சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்னை நெற்குன்றம் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெயபாண்டியன். 66 வயது முதியவரான இவர் வளசரவாக்கம் மெஜஸ்டிக் காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு சாலையில் நின்றிருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தார். அப்போது ஒரே இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அவரிடம் முகவரி கேட்பது அருகில் நெருங்கினர். அவரிடம் பேசிக் கொண்டிருந்த அவர்கள் எதிர்பாராத நேரத்தில் திடீரென அவரது சட்டைப் பையில் இருந்த செல்ஃபோனை எடுத்துக்கொண்டு வேகமாக இருசக்கர வாகனத்தில் பறந்தனர்.
இருப்பினும் விடாமல் இருசக்கர வாகனத்தில் கடைசியாக இருந்த நபரை பிடித்துக்கொண்டு அவர் துரத்திய போது அவரது கையை அந்த நபர் பற்றிக்கொள்ள இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் வெகுதூரம் பறந்தனர். இதனால் சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட ஜெயபாண்டியன் உடலின் பல்வேறு இடங்களில் காயம் அடைந்தார்.
இது தொடர்பான புகாரின் பேரில் சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். முன்பு ரோந்து பணியை தீவிரப்படுத்திய போலீசார், மீண்டும் மெத்தனம் காட்டுவதால் சங்கிலிப் பறிப்பு, செல்ஃபோன் திருட்டு உள்ளிட்டவை அதிகரித்து விட்டதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்