MeToo பாலியல் புகார்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் குறித்து ஆராய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைக்க உள்ளது.
MeToo பாலியல் புகார்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் குறித்து ஆராய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைக்க உள்ளது. நாட்டில் இப்போது அரசியல், சினிமா, தொழில்துறை உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தற்போது தூக்கத்தை தொலைத்து, கதி கலங்கி போயுள்ளனர். அதற்கு காரணம், சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள ‘மீ டூ’ என்ற ‘ஹேஸ்டேக்’தான்.
பல ஆண்டுகளுக்கு முன் தங்களின் அதிகார பலத்தை பயன்படுத்தி, தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றிய ரகசியங்களை பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது இதில் வெளியிட்டு வருகின்றனர். இதில், தங்களால் பாதிக்கப்பட்ட எந்த பெண்ணாவது பழைய ரகசியத்தை வெளியிட்டு விடுவார்களோ என பிரபலங்கள் மிரண்டு போயுள்ளனர். இந்த ‘மீ டூ’வில் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் துன்புறுத்தல்களை கூட பெண்கள் தைரியமாக பதிவிட்டு வருகின்றனர். இதில், சினிமா பிரபலங்கள், தொலைக்காட்சி நடிகர்கள் என பலர் சிக்கியுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது அரசியலும் இணைந்து விட்டது.
இந்த சூழலில் பாலியல் புகார்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் தண்டனைகள் குறித்து ஆய்வு செய்ய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை மேனகா காந்தி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் இந்தக் குழுவில் இடம்பெறுவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. MeToo புகார்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, சட்டங்கள் மற்றும் புகார் அளிக்கும் நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டுமா என்பது குறித்து இந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.