Breaking News
அமிர்தசரஸ் துயரத்தின் போது, மக்கள் செல்பி எடுத்த காட்சிகள், விமர்சனம்

தசரா கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக, தீமையை நன்மை வெற்றி கொள்வதை குறிக்கும்வகையில், ராவணனின் ராட்சத உருவ பொம்மை தீயிட்டு எரிக்கப்படுவது வழக்கம்.

நேற்று பஞ்சாப் மாநிலத்திலும் தசரா கொண்டாட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்றன. அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் தசரா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரெயில் தண்டவாளத்துக்கு அருகே உள்ள மைதானத்தில் நிகழ்ச்சி நடந்தது. பஞ்சாப் உள்ளாட்சித்துறை மந்திரி நவ்ஜோத்சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
வழக்கம்போல், அங்கு ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடந்தது. அதைக் காண்பதற்காக, சுமார் 600 பேர் திரண்டு இருந்தனர். சிலர் இடப்பற்றாக்குறையால், தண்டவாளத்திலும், தண்டவாளத்தின் அருகிலும் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு செல்லும் ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரெயில் அவ்வழியாக அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில், எதிர்திசையில் மற்றொரு ரெயில் வந்து கொண்டிருந்தது.

தசரா கொண்டாட்டத்துக்காக பட்டாசுகள் இடைவிடாமல் வெடித்துக் கொண்டிருந்தன. அந்த சத்தத்தால், ரெயில்கள் வரும் சத்தம், யாருக்கும் கேட்கவில்லை. அதனால், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள், ஆர்வ மிகுதியால் அங்கேயே இருந்தனர். மேலும் பலரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

ரெயில்கள் மிக நெருக்கமாக வந்தபோதுதான் தெரிந்தது. ஆனால், தப்பிக்க வழி இல்லாததால், கண் இமைக்கும் நேரத்தில், அவர்கள் மீது ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. அடுத்த நொடியில், அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த கோர விபத்தில், 60 பேர் பலியானார்கள். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.இந்நிலையில், உயிரிழப்பு 61 ஆக அதிகரித்துள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து, சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர், தனது காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார். விபத்து காரணமாக, அந்த பாதையில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இந்த ரெயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

விபத்தில் காயம் அடைந்தவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் நவஜோத் சிங் சித்து ஆறுதல் கூறினார்.

பின்னால் வரும் துன்பதை பற்றி கவலையில்லாமல் சிலர் ரெயில்வே டிராக் மீது இருந்து செல்பி எடுத்து உள்ளனர். பல அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் டுவிட்டரில் செல்பி கலாச்சாரத்தால்தான் இந்த விபத்து நடந்ததாக கூறி உள்ளனர்.

தொலைக்காட்சி சேனல்களில் விபத்து நடந்த வீடியோ காட்சிகள் கொடூரமான விபத்து நிகழ்ந்தபோது பகுதி முழுவதும் இருந்து பல மொபைல் போன்கள் வெளிச்சம் வீடியோ எடுப்பதை காட்டியது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறும்போது,

அறிவற்ற செயல், முற்றிலும் தவிர்க்கக்கூடிய சம்பவம் இந்த வீடியோவை பார்க்கும் போது, சோகமான நிகழ்வை நோக்கி மக்கள் பயணித்து வருகிறார்கள் மக்கள் தங்கள் தொலைபேசிகளிலிருந்து செல்பி எடுக்க ஆர்வம் காட்டி உள்ளனர். அப்போது மக்கள் மீது ரெயில் மோதி உள்ளது.

மக்கள் மீது ரெயில் ஏறி விபத்து நடந்த பிறகும் சிலர் மொபைல் போனில் செல்பி எடுத்து வருகின்றனர் என ஆம் ஆத்மி கட்சி பிரித்திச் அர்மா மேனன் கூறி உள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.