‘எனக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது’ பஞ்சாப் ரெயில் விபத்தில் ரெயில் ஓட்டுநரிடம் விசாரணை
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் தசரா கொண்டாட்ட நிகழ்ச்சி ரெயில் தண்டவாளத்துக்கு அருகே உள்ள மைதானத்தில் நடந்தது. இதில் பஞ்சாப் உள்ளாட்சித்துறை மந்திரி நவ்ஜோத்சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வழக்கம்போல், அங்கு ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது பட்டாசுகள் வெடித்த போது, தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் ஏறிச்சென்றது. இதில் 61 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். ரெயில்வே தண்டவாளம் பகுதி அனுமதியளிக்கப்படாத பகுதியாகும். நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்படவில்லை என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்துதொடர்பாக கைது செய்யப்பட்ட ரெயில் ஓட்டுநர் ‘எனக்கு கிரீன் சிக்னல்தான் கொடுக்கப்பட்டது,’ என தெரிவித்துள்ளார்.
ரெயிலுக்கு கிரீன் சிக்னல்தான் கொடுக்கப்பட்டது, நூற்றுக்கணக்கான மக்கள் ரெயில்வே தண்டவாளத்தில் நிற்கிறார்கள் என்பது தொடர்பாக எனக்கு எந்தஒரு ஐடியாவும் கிடையாது என தெரிவித்துள்ளார். அவரிடம் பஞ்சாப் போலீசும், ரெயில்வே போலீசும் விசாரித்துள்ளது. விபத்து நேரிட்ட போது புகைமூட்டம் இருந்ததாகவும், பட்டாசு சத்தம் மற்றும் மக்கள் கோஷமும் இருந்துள்ளது என கூறப்படுகிறது.
இதற்கிடையே அனுமதியின்றி ரெயில்வே பகுதியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.