Breaking News
சபரிமலைக்கு செல்ல முயன்ற மேலும் 6 பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் பக்தர்கள் போராட்டம் நீடிப்பு

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து இருக்கும் நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17-ந் தேதி சபரிமலை கோவிலின் நடை திறக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அய்யப்பனை தரிசிப்பதற்காக வந்த பெண்கள் பக்தர்களால் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அந்த பகுதிகளில் போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொச்சியை சேர்ந்த ரெஹானா பாத்திமா என்ற முஸ்லிம் பெண்ணியவாதியும், ஆந்திராவை சேர்ந்த டி.வி. பெண் நிருபர் கவிதா கோஷியும் கடந்த 19-ந் தேதி சபரிமலைக்கு வந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை, 18-ம் படி அருகே வைத்து அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் திரும்பி சென்றனர்.

இதைப்போல நேற்று முன்தினம் சபரிமலைக்கு செல்ல முயன்ற தலித் பெண் ஆர்வலர் ஒருவரும், பக்தர்களின் போராட்டம் மற்றும் கனமழை காரணமாக பம்பையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்த போராட்டங்கள் மற்றும் மோதல் காரணமாக சபரிமலை வட்டாரத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் இன்று (திங்கட்கிழமை) வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் 200 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு சபரிமலை விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கும் நிலையில், ஆந்திராவை சேர்ந்த புனித யாத்திரை குழு ஒன்று நேற்று சபரிமலைக்கு வந்தது. கேரளாவில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்ட அவர்கள், அதன் தொடர்ச்சியாக சபரிமலைக்கு வந்தனர்.

இந்த குழுவில் வாசந்தி (வயது 40), ஆதித்ய சேஷி (42) உள்பட சில பெண்களும் இருந்தனர். பம்பை அருகே அவர்களை தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள், இந்த 2 பெண்களும் சபரிமலைக்கு செல்வதற்கு அனுமதி மறுத்தனர். அந்த குழுவில் இருந்த 50 வயதுக்கு மேற்பட்ட பிற பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து அந்த 2 பெண்களிடமும் போலீசார் விவரங்களை தெரிவித்தனர். அதற்கு அந்த பெண்கள், சபரிமலையில் நடந்து வரும் போராட்டம் குறித்து தெரியாமல் வந்ததாகவும், கோவிலில் பாரம்பரியமாக பின்பற்றப்படும் நடைமுறைகளை தாங்கள் குலைக்க விரும்பவில்லை என்றும் எழுதி கொடுத்துவிட்டு திரும்பி சென்றனர்.

இதைப்போல ஆந்திராவை சேர்ந்த பாலம்மாள் (47) என்ற பெண்ணும் நேற்று மதியம் சபரிமலைக்கு வந்தார். வலியநடை பந்தல் அருகே பாலம்மாளை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை முற்றுகையிட்டு சரண கோஷம் எழுப்பினர். அப்போது எதிர்பாராத விதமாக பாலம்மாள் மயங்கி விழுந்தார்.

உடனே போலீசார் மூலம் பம்பை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் சபரிமலைக்கு செல்ல முயன்ற புஷ்பலதா என்ற ஆந்திரா பெண்ணும் மரக்கூட்டம் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் அவரும் திரும்பி சென்றார்.

இதைப்போல மேலும் 2 பெண்களும் நேற்று சபரிமலைக்கு செல்லும் வழியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்களும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் ஆவர். சபரிமலையில் நடை திறக்கப்பட்ட 17-ந் தேதியில் இருந்து நேற்று வரை, தடை செய்யப்பட்ட வயதுடைய மொத்தம் 12 பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்று திருப்பி அனுப்பப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தும் மாநில அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து போராட்டங்களை தீவிரப்படுத்த சபரிமலை கர்ம சமிதி அமைப்பு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக போராட்டக்காரர்கள் மீது போலீசார் எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டித்து மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களை நோக்கி ‘நாமஜெப யாத்திரை’ நடத்த அந்த அமைப்பு அழைப்பு விடுத்து உள்ளது.

அதன்படி எருமேலியில் நேற்று கண்டன ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பெண்களும் பங்கேற்று சரண கோஷம் முழங்கினர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இன்று நடை அடைக்கப்படுகிறது. அங்கு மண்டல பூஜைக்காக அடுத்த மாதம் (நவம்பர்) மீண்டும் நடை திறக்கப்படும் நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்படும் என மாநில போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெகரா தெரிவித்தார்.

சபரிமலை விவகாரத்தில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க சட்டசபையை கூட்டுமாறு மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.