Breaking News
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி கோலி, ரோகித் சர்மா சதம் விளாசினர்

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்து படுதோல்வி அடைந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இந்திய அணியில் அறிமுக வீரராக ரிஷாப் பான்ட் இடம் பிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் சந்தர்பால் ஹேம்ராஜ், ஒஷானே தாமஸ் ஆகிய புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி கீரன் பவெலும், சந்தர்பால் ஹேம்ராஜூம் வெஸ்ட் இண்டீசின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். பவுண்டரியுடன் இன்னிங்சை தொடங்கிய பவெல் அதிரடியாக ஆடினார்.
ஆடுகளம் முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு உகந்த வகையில் காணப்பட்டது. ஆடுகளத்தில் பந்து ஸ்விங்கும் ஆகவில்லை. பெரிய அளவில் சுழன்றும் திரும்பவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் துரிதமாக ரன்கள் திரட்டுவதில் அதிக கவனம் செலுத்தினர். ஹேம்ராஜ் 9 ரன்னில் போல்டு ஆனார். கீரன் பவெல் தனது பங்குக்கு 51 ரன்கள் (39 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். எதிர்பார்க்கப்பட்ட சாமுவேல்ஸ் (0) டக்-அவுட் ஆகி ஏமாற்றினார். சாமுவேல்சுக்கு இது 200-வது ஒரு நாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு ஷிம்ரோன் ஹெட்மயர் அணியை தூக்கி நிறுத்தினார். இந்திய வேகப்பந்துவீச்சை பஞ்சராக்கிய ஹெட்மயர் ரன்ரேட் 6 ரன்களுக்கு குறைய விடாமல் பார்த்துக் கொண்டார். முகமது ஷமியின் பந்து வீச்சில் சிக்சர் அடித்து ஹெட்மயர் தனது 3-வது சதத்தை நிறைவு செய்தார். அவர் களத்தில் நின்றது வரை அந்த அணி 350 ரன்கள் வரை எட்டுவதற்கு வாய்ப்பு தென்பட்டது. அணியின் ஸ்கோர் 248 ரன்களாக (38.4 ஓவர்) உயர்ந்த போது ஹெட்மயர் 106 ரன்களில் (78 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) ஜடேஜாவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

பின்வரிசை வீரர்களும் கணிசமான பங்களிப்பை அளித்து தங்கள் அணியை 300 ரன்களை கடக்க வைத்தனர். ஆனாலும் கடைசி கட்டத்தில் இந்திய பவுலர்கள் கொஞ்சம் கட்டுப்படுத்தினர் என்றே சொல்ல வேண்டும். கடைசி 11 ஓவர்களில் அந்த அணி 73 ரன்களே எடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் சேர்த்தது. இந்திய தரப்பில் சிக்கனத்தை காட்டிய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 10 ஓவர்களில் 41 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வள்ளலாக மாறிய முகமது ஷமி தனது பந்து வீச்சில் 10 பவுண்டரியும், 3 சிக்சரும் வாரி வழங்கினார்.

பின்னர் 323 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் அடியெடுத்து வைத்தனர். தவான் 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஒஷானே தாமஸ் மணிக்கு 147 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பந்து அவரது பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பையும் தாக்கியது. இதன் பின்னர் கேப்டன் விராட் கோலி இறங்கினார்.

எந்தவித சலனமும் இல்லாத இந்த ஆடுகளத்தில் விராட் கோலி வெளுத்து வாங்கினார். பவுண்டரிகளாக விரட்டியடித்த விராட் கோலி மளமளவென ரன்களை குவித்தார். ரோகித் சர்மாவும், வெஸ்ட்இண்டீசின் பவுலர்களை தண்டிக்க தவறவில்லை. தேவேந்திர பிஷூவின் பந்து வீச்சில் அவர் 2 சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். பனிப்பொழிவின் தாக்கத்தால் பந்தை சரியாக பிடித்து வீச முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் சிரமப்பட்டனர். இது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மேலும் சாதகமாக போனது.

வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய விராட் கோலி பவுண்டரி அடித்து தனது 36-வது சதத்தை பூர்த்தி செய்தார். சிறிது நேரத்தில் ரோகித் சர்மா தனது 20-வது சதத்தை எட்டினார். அபாரமாக ஆடிய விராட் கோலி 140 ரன்களில்(107 பந்து, 21 பவுண்டரி, 2 சிக்சர்) பிஷூவின் சுழற்பந்து வீச்சில் ஸ்டம்பிங் ஆனார். கோலி-ரோகித் கூட்டணி 2-வது விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்தது. அடுத்து அம்பத்தி ராயுடு வந்தார்.

மறுமுனையில் ருத்ரதாண்டவமாடிய ரோகித் சர்மா தொடர்ந்து ரன்மழை பொழிந்தார். அவரை கட்டுப்படுத்த வழிதெரியாமல் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. தாமசின் பந்து வீச்சில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி சாத்திய ரோகித் சர்மா, 43-வது ஓவரில் பந்தை சிக்சருக்கு தூக்கியடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.

இந்திய அணி 42.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 326 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ‘மெகா’ வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 152 ரன்களுடனும் (117 பந்து, 15 பவுண்டரி, 8 சிக்சர்), அம்பத்தி ராயுடு 22 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை மறுதினம் (புதன்கிழமை) நடக்கிறது.

ஸ்கோர் போர்டு

வெஸ்ட் இண்டீஸ்

கீரன் பவெல் (சி) தவான் (பி)

கலீல் அகமது 51

ஹேம்ராஜ் (பி) ஷமி 9

ஷாய் ஹோப்(சி)டோனி(பி)ஷமி 32

சாமுவேல்ஸ் எல்.பி.டபிள்யூ

(பி) சாஹல் 0

ஹெட்மயர்(சி)பான்ட்(பி)ஜடேஜா 106

ரோவ்மன் பவெல் (பி) ஜடேஜா 22

ஹோல்டர் (பி) சாஹல் 38

ஆஷ்லே நர்ஸ் எல்.பி.டபிள்யூ

(பி) சாஹல் 2

தேவேந்திர பிஷூ (நாட்-அவுட்) 22

கெமார் ரோச் (நாட்-அவுட்) 29

எக்ஸ்டிரா 14

மொத்தம் (50 ஓவர்களில்

8 விக்கெட்டுக்கு) 322

விக்கெட் வீழ்ச்சி: 1-19, 2-84, 3-86, 4-114, 5-188, 6-248, 7-252, 8-278

பந்து வீச்சு விவரம்

முகமது ஷமி 10-0-81-2

உமேஷ் யாதவ் 10-0-64-0

கலீல் அகமது 10-0-64-1

யுஸ்வேந்திர சாஹல் 10-0-41-3

ஜடேஜா 10-0-66-2

இந்தியா

ரோகித் சர்மா (நாட்-அவுட்) 152

ஷிகர் தவான் (பி) தாமஸ் 4

விராட் கோலி (ஸ்டம்பிங்)

ஹோப் (பி) பிஷூ 140

அம்பத்தி ராயுடு (நாட்-அவுட்) 22

எக்ஸ்டிரா 8

மொத்தம் (42.1 ஓவர்களில்

2 விக்கெட்டுக்கு) 326

விக்கெட் வீழ்ச்சி: 1-10, 2-256

பந்து வீச்சு விவரம்

கெமார் ரோச் 7-0-52-0

தாமஸ் 9-0-83-1

ஹோல்டர் 8-0-45-0

ஆஷ்லே நர்ஸ் 7-0-63-0

பிஷூ 10-0-72-1

ஹேம்ராஜ் 1.1-0-9-0

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.