மிதாலி ராஜ் சதம்
மிதாலி ராஜ் சதம் அடித்து விளாச இரண்டாவது ‘டுவென்டி-20’ போட்டியில்இந்திய பெண்கள் ‘ஏ’ அணி, ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
‘டுவென்டி-20’ பெண்கள் உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் அடுத்த மாதம் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய ‘ஏ’, ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று மும்பையில் நடந்தது.
முதலில் விளையாடிய இந்திய ‘ஏ’ அணிக்கு மந்தனா (1), ஜெமிமா (5), ஹேமலதா (2) என வரிசையாக வீழ்ந்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் 57 ரன் எடுத்தார். மிதாலி ராஜ் ‘டுவென்டி-20’ அரங்கில் இரண்டாவது சதம் அடித்தார். 20 ஓவரில் இந்திய ‘ஏ’ அணி 5 விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்தது. 18 பவுண்டரி, 1 சிக்சர் என 61 பந்தில் 105 ரன் எடுத்த மிதாலி ராஜ், பூஜா (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி டகிலா மெக்ராத் (47), ஹீதர் (24), கேப்டன் ஸ்டான்ரோ (16) அதிகபட்ச ரன்கள் எடுத்து உதவினர். 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 156 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி நாளை நடக்கிறது.
நேற்று 105 ரன்கள் விளாசிய மிதாலி ராஜ், இந்திய பெண்கள் ‘டுவென்டி-20’ அரங்கில் ஒரு போட்டியில் அதிக ரன் எடுத்த வீராங்கனை ஆனார். இதற்கு முன் ஸ்மிருதி மந்தனா 102 ரன்கள் (2018) எடுத்திருந்தார். தவிர ‘டுவென்டி-20’ கிரிக்கெட்டில் இரண்டு சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை ஆனார் மிதாலி ராஜ் (105, 100).