Breaking News
டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேரிடம் விளக்கம் கேட்க அரசு கொறாடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை

அ.தி.மு.க.வை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால், தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த தகுதி நீக்கத்தை நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டு உறுதிப்படுத்தியது. இதனால், 18 எம்.எல்.ஏ.க்களும் பதவியை இழந்துள்ளனர். 3-வது நீதிபதி தீர்ப்பை எதிர்த்து இந்த 18 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, 18 எம்.எல்.ஏ.க்களின் தீர்ப்பு பாதகமாக அமைந்துவிட்டதால், தங்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுவிடுமோ? என்று இவர்கள் 3 பேரும் அஞ்சுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த 3 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்காத பட்சத்தில், கொறடா ராஜேந்திரன் மூலம் சபாநாயகர் ப.தனபாலிடம் புகார் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் 3 எம்.எல்.ஏக்களிடமும் விளக்கம் கேட்க அரசு கொறாடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்து உள்ளார்.

இதை தொடர்ந்து சபாநாயகர் தனபால், ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகிய 3 பேரிடம் அவரும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கும் அவர்கள் பதில் அளிக்காத பட்சத்தில், 18 எம்.எல்.ஏ.க்களை போல் இவர்களும் தகுதிநீக்க நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்.

எனவே, டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்துவரும் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகிய 3 பேரும் என்ன முடிவெடுப்பது என்ற குழப்பத்தில் அமைதியாக இருந்து வருகின்றனர். அவர்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்தே, அவர்கள் மீது நடவடிக்கை பாயுமா? என்பது தெரியவரும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.