Breaking News
திருவாரூர் அருகே பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த தாய்-மகளிடம் துப்பாக்கிமுனையில் 150 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி காந்தி தெருவை சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி. இவரது மனைவி சம்சாத்பேகம்(வயது 45). தமிமுன் அன்சாரி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சம்சாத்பேகம் மற்றும் அவரது மகள் தமிமுன் யாஸ்மின்(18) ஆகிய இருவரும் பொதக்குடியில் உள்ள வீட்டில் இருந்து வருகின்றனர்.
நேற்று மதியம் சம்சாத் பேகம், மகள் தமிமுன் யாஸ்மின் ஆகிய இருவரும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் அங்கு வந்து கதவை தட்டினர்.

துப்பாக்கியை காட்டி மிரட்டினர்

சம்சாத்பேகம் கதவை திறந்து யாரென்று கேட்பதற்குள் மர்ம நபர்கள் 2 பேரும் அவரை தள்ளிக்கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்தனர். நிலைமையை உணர்ந்த சம்சாத்பேகம் சத்தம் போடுவதற்குள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி சம்சாத்பேகம் மற்றும் மகள் தமிமுன் யாஸ்மின் ஆகிய இருவரையும் சத்தம் போடக்கூடாது, சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

பீரோ இருக்கும் இடத்தை காட்டச்சொல்லி அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் உயிருக்கு பயந்து போன சம்சாத்பேகம் பீரோ இருக்கும் இடத்தை காட்டியுள்ளார்.

150 பவுன் நகைகள்- ரூ.1 லட்சம் கொள்ளை

அவரிடமிருந்து பீரோவின் சாவியை பறித்துக்கொண்ட மர்ம நபர்கள், பீரோவை திறந்து அதன் உள்ளே சம்சாத்பேகம் உறவினர் வீட்டு திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 150 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். அதனைத்தொடர்ந்து மர்ம நபர்கள், தாய்-மகள் இருவரையும் வீட்டிற்குள்ளேயே தள்ளி விட்டு கதவை சாத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

கண்காணிப்பு கேமரா

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதிகளில் வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்கள் குறித்த படங்கள் எதுவும் பதிவாகி உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

கொள்ளை நடந்த வீட்டுக்கு கைரேகை நிபுணர்கள் வர வழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

வலைவீச்சு

கொள்ளை தொடர்பாக சம்சாத்பேகம் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கூத்தாநல்லூர் போலீசார் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.