2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி
இந்தியா- ஜப்பான் இடையேயான ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடியை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். அக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய இருநாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
13-வது முறையாக நடைபெற்று வரும் இந்த மாநாட்டில், பிரதமர் மோடி 5-வது முறையாக கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டின் போது ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, ஜப்பான் பிரதமரும் பிரதமர் மோடியும் பல விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர். கொரிய தீபகற்பத்திலும், வட கொரியாவிடமும் ஜப்பானுக்கு உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது
மேலும், பிரதமர் மோடிக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மலைப் பகுதியில் இருக்கும் அவரது விருந்தினர் இல்லத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விருந்து அளிக்க உள்ளார். வெளிநாட்டு தலைவர் ஒருவருக்கு இவ்வாறு சொந்த இல்லத்தில் அபே விருந்து அளிப்பது இதுவே முதல்முறையாகும். அதற்கு அடுத்த நாளில் இரு நாட்டு தலைவர்களும் இந்திய-பசுபிக் பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்தும் விவாதிக்க உள்ளனர்.