Breaking News
“‘மீ டூ’ பிரச்சினையில் நானும் சிக்கி இருக்கிறேன்” நடிகை நிவேதா பெத்துராஜ் பேட்டி

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ‘திமிரு புடிச்சவன்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து இருக்கிறார். கணேஷா டைரக்டு செய்திருக்கும் இந்த படத்தை விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா ஆண்டனி தயாரித்து இருக்கிறார். படக்குழுவினர் அனைவரும் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள்.

“பெண்களிடம் யாராவது ஒருவன் தவறாக நடக்க முயன்றால், அந்த இடத்திலேயே எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். ரொம்ப நாட்கள் கழித்து அந்த தவறை வெளிப்படுத்தினால் சம்பந்தப்பட்டவர் மட்டுமல்லாமல், அவருடைய குடும்பமும் பாதிக்கப்படும். அவர் செய்த தவறுக்கு குடும்பத்தினர் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?

‘மீ டூ’ பிரச்சினையில் நானும் சிக்கி இருக்கிறேன். ஒரு ‘பார்ட்டி’க்கு போன இடத்தில், அது நடந்தது. நான் துபாயில் வளர்ந்த பெண் என்றாலும், மதுரையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண். வெட்கம், பயம் காரணமாக நான் அதை வெளியில் சொல்லவில்லை. தவறு என் மீது தான். நான் அந்த ‘பார்ட்டி’க்கு போயிருக்க கூடாது. போகாமல் இருந்தால் பலாத்கார முயற்சியை தவிர்த்து இருக்கலாம்.

இப்போது நான் தெளிவாக இருக்கிறேன். அதுபோன்று ஒரு சம்பவம் நடந்தால், என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்.

‘திமிரு புடிச்சவன்’ படத்தில் நான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்து இருக்கிறேன். முதலில் மோசமான போலீஸ் அதிகாரியாக இருந்து நல்ல போலீஸ் அதிகாரியாக மாறுகிற கதாபாத்திரம். இந்த வேடத்துக்காக ‘புல்லட்’ ஓட்ட பயிற்சி பெற்றேன். என் சினிமா வாழ்க்கையில், இந்த படமும் என் கதாபாத்திரமும் முக்கியமானதாக இருக்கும். இப்போது, ஜெகஜால கில்லாடி, பொன்மாணிக்கவேல் மற்றும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறேன். எனக்கு அதிக பட வாய்ப்புகள் வராததற்கு காரணம், நான் யாரிடமும் போய் வாய்ப்பு கேட்டு நிற்பதில்லை. என்னை தேடி வரும் படங்களில் மட்டுமே நடிக்கிறேன்.

இணைய தளங்களில் என் கவர்ச்சி படங்கள் நடமாடுகின்றன. அந்த படங்கள் நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு, ‘மாடலாக’ இருந்தபோது எடுக்கப்பட்டவை. நான் கண்ணகியாக நடிக்க ஆசைப்படுகிறேன். தமிழ் பெண் என்பதால், மற்றவர்களை காட்டிலும் எனக்கு அந்த ஆசை அதிகமாக இருக்கிறது.”

இவ்வாறு நிவேதா பெத்துராஜ் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.